Last Updated : 05 Jul, 2019 12:00 AM

 

Published : 05 Jul 2019 12:00 AM
Last Updated : 05 Jul 2019 12:00 AM

கர்நாடக சட்டப் பேரவைக்குள் எலுமிச்சை கொண்டு செல்ல தடை

கர்நாடக சட்டப்பேரவையான விதான சவுதா வளாகத்திற்குள் எலுமிச்சை பழம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்னும் சில அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பாஜக மேலிடம், மஜத எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள கர்நாடக சட்டப்பேரவையான விதான சவுதா வளாகத்திற்குள் எலுமிச்சை பழம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், விதான சவுதாவுக்கு வரும் பார்வையாளர்களின் பை, டிபன் பாக்ஸ் ஆகியவற்றை தீவிரமாக சோதிக்கின்றனர்.

இதுகுறித்து விதான சவுதா ஊழியர்கள் கூறுகையில், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பில்லி சூனியம், செய்வினை போன்றவற்றில் நம்பிக்கை அதிகம். அவரது ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினர் ஆட்சி கவிழ வேண்டும் என்பதற்காக பில்லி சூனியம் செய்துள்ளதாக அவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அறை கதவுகளுக்கு அருகே எலுமிச்சை பழங்கள் கிடந்தன. இதனால், அமைச்சர்கள் அச்சம் அடைந்த நிலையில், தற்போது எலுமிச்சைக்கு தடை விதிக்க‌ப்பட்டுள்ளது. அதே வேளையில், குமாரசாமியின் சகோதரரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான ரேவண்ணாவுக்கு மட்டும் எலுமிச்சை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

இந்த வினோத உத்தரவுக்கு கர்நாடக எதிர்க்கட்சியினரும், முற்போக்கு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x