Last Updated : 12 Jul, 2019 02:05 PM

 

Published : 12 Jul 2019 02:05 PM
Last Updated : 12 Jul 2019 02:05 PM

கர்நாடக அரசியல் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சவால் விட சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறதா?- தலைமை நீதிபதி கேள்வி

10 எம்எல்ஏக்கள் ராஜினாமா மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறேன் என்று கூறியுள்ள கர்நாடக மாநில சபாநாயகர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சவால்விடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவரா என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கேள்வி எழுப்பினார்.

கர்நாடக அரசியல் இப்போதுள்ள நிலைமையை தொடரட்டும், செவ்வாய்க்கிழமை மீண்டும் மனு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், 10 எமஎல்ஏக்கள் ராஜினாமா செய்தது ஏற்கப்படாமல் இருக்கிறது. குமாரசாமி அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உட்பட 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.

அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேரையும் பாஜக நிர்வாகிகள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்று சொகுசு ஓட்டலில் தங்க வைத்துள்னர்.  

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களைப் பரிசீலித்த பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் , 8 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் விதிமுறைக்கு மாறாக இருக்கிறது எனக் கூறி அதை ஏற்க முடியாது எனக் கூறி நிராகரித்து விட்டார்.

மேலும், இதில் 5 எம்எல்ஏக்களும் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதங்கள் நிராகரிக்கப்பட்ட 8 எம்எல்ஏக்களும் சபாநாயகரை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கடிதம் அளித்தால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆகியோர் இணைந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மனுத் தாக்கல் செய்தனர். இவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் "மும்பையில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் சபாநாயகரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா குறித்து முறைப்படி தெரிவிக்க வேண்டும். எம்எல்ஏக்கள் ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகரும் இன்றுக்குள் (நேற்று) முடிவு எடுத்து அதை நீதிமன்றத்துக்கு  தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் இன்றுக்குள் தெரிவித்தபின் இந்த விவகாரம் நாளை (இன்று) மீண்டும் விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.

இதை எதிர்த்து பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் சார்பில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போது ஆஜரான காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக் கறிஞருமான அபிஷேக் சிங்வி, “பேரவைத் தலைவர் அரசியல் சாசனப்படி ராஜினாமா கடிதங்களை அலசி ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க முடியும். இதில் திட்டமிட்ட கால தாமதம் எதுவுமில்லை. பேரவைத் தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது. எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், பேரவைத் தலைவரின் மேல் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்தது.

இதனிடையே இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி ஆஜராகி வாதிடுகையில், "எம்எல்ஏக்கள் ராஜினாமாக் கடிதத்தை ஏற்கும் விவகாரத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்கள் அவசாகத்தை சபாநாயகர் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், அவர் முடிவு ஏதும் எடுக்காவிட்டால், அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றம் சென்றதை சுட்டிக்காட்டிப் பேசிய சபாநாயகர், "எப்படியாவது ஒழிந்துபோங்க" என்று ஊடகங்கள் முன் பேசியுள்ளார் எனத் வாதிட்டார்.

அப்போது முதல்வர் குமாரசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் ஆஜராகி வாதாடினார். அவர் வாதிடுகையில், "மாநில அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திவிட்டு 10 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்கிறார்கள். அதற்கான ஆதாரம் இல்லாமல் எவ்வாறு ராஜினாமா செய்வது, 10 எம்எல்ஏக்களில் ஒருவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த ராஜினாமா மீது மனநிறைவுடன் முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு சபாநாயருக்கு இருக்கிறது" என்றார்.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், "எங்கள் உத்தரவை மீறி செயல்படுவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறதா?" எனக் கேட்டார்

அப்போது சபாநாயகர் தரப்பபில் ஆஜராகிய வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், "எம்எல்ஏக்கள் ராஜினாமா மீது உரிய முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடியாது. அதை பரிசீலனை செய்த பிறகே எடுக்க முடியும். 8 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு. அரசமைப்புச் சட்டம் அந்த அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு எம்எல்ஏக்கள் மனுவை விசாரிக்கச் சபாநாயகர் கடமைப்பட்டவர். சபாநாயகர் மிகவும் மூத்த உறுப்பினர். அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் அவருக்கு நன்கு தெரியும்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், "இந்த விவகாரத்தில் இப்போதுள்ள நிலைமையே தொடரட்டும், வரும் செவ்வாய்கிழமை இந்த மனு மீண்டும் விசாரிக்கப்படும்" என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x