

மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ராகுல் காந்தி பாப்கார்னைக் கொறித்தபடி பக்கத்தில் அமர்ந்திருப்பவருடன் உரையாடும் வீடியோ உடனுக்குடன் பகிரப்பட்டு வைரலானது. அத்துடன் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
ஜூலை 3-ம் தேதி அன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி பகிரங்கமாக அறிவித்தார். சில மணிநேரங்களுக்குப் பிறகு ராகுல் காந்தி ஒரு திரைப்படத்திற்குச் சென்றார்.
இது தொடர்பாக ராகுல் காந்தியுடன் படம் பார்த்த ட்விட்டர் பயனர் ராமன் ஷர்மா என்பவர் தனது பதிவில் தெரிவித்துள்ளததாவது:
''ஒரு அரசியல் தலைவருக்குண்டான விஐபி கலாச்சாரத்தின் எந்தவிதமான அடையாளமும் இன்றி ராகுல் காந்தி சினிமா பார்க்க வந்திருந்தார். அவருடன் வரவேண்டிய சிறப்புப் பாதுகாப்புக் குழு எதுவும் உடன் வரவில்லை. அவர் பார்த்த திரைப்படம் 'ஆர்டிகிள் 15'.
இப்படம் இந்திய அரசியலமைப்பின் 15-வது பிரிவு அடிப்படையில் மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பதைத் தடை விதிப்பதைப் பற்றி பேசுகிறது.
நேரு வாரிசான ராகுல் விஐபி கலாச்சாரத்தின் அறிகுறிகள் ஏதுமின்றி பிரீமியம் இருக்கையை முன்பதிவு செய்யவில்லை. ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்த அவர் விஐபி கலாச்சாரத்திற்கான எந்தவித அடையாளத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாததால் பலரும் அவரைப் பாராட்டினர்.
பொதுவாக விஐபிக்கள் அருகிலுள்ள இருக்கைகளையும் தங்களுக்காகப் பதிவு செய்துகொள்வார்கள். அப்படியெதுவும் செய்யாததே பலரையும் கவர்ந்தது''.
இவ்வாறு ராமன் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு ட்விட்டர் பயனர் தெரிவிக்கையில்,''திரையரங்கில் 'ஆர்டிகிள் 15' படத்தை ராகுல் காந்தி பார்க்கும் வீடியோ பதிவு வைரலாகியது. அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. உயரத்தில் இருந்தால் எளிமையாகப் பழகும் பணிவு, நேர்மை, துணிவு மிக்க இவர்தான் என் தலைவர். அவரது நேரம் வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு நல்ல மனிதனை நீண்ட நேரம் கீழே வைத்திருக்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.