Published : 09 Jul 2019 07:48 AM
Last Updated : 09 Jul 2019 07:48 AM

நாடாளுமன்ற துளிகள்: ஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம்

ஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம்

ஆதார் அட்டை திட்டம் சட்டப்படி செல்லும் என்று கடந்த 2018 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் செல்போன் சிம் கார்டு வாங்க, வங்கிக் கணக்கு தொடங்க, பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயமில்லை என்று உத்தரவிட்டது. அதற்கேற்ப ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சுயவிருப்பத்தின்பேரில் ஆதாரை ஆவணமாக பயன்படுத்தலாம் என்று திருத்தம் செய்யப்பட்டு, ‘ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா' கடந்த ஜனவரியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் முடங்கியதால் மசோதா காலாவதியானது.

இதைத் தொடர்ந்து 17-வது மக்களவையில் புதிதாக ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கடந்த 5-ம் தேதி மக்களவையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் ஆதார் சட்டம் அமலுக்கு வரும். புதிய சட்டத்தின்படி ஆதார் விதிகளை மீறுவோருக்கு ரூ.1 கோடி அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

டிஎன்ஏ மசோதா மக்களவையில் தாக்கல்

கடந்த ஜனவரியில் டிஎன்ஏ மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் முடங்கியதால் மசோதா காலாவதியானது. இதைத் தொடர்ந்து டிஎன்ஏ தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

"இந்த மசோதாவின்படி தேசிய டிஎன்ஏ தகவல் வங்கி, மாநிலங்களில் டிஎன்ஏ தகவல் வங்கிகள் அமைக்கப்படும். இதன்மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்களை டிஎன்ஏ சோதனை மூலம் கண்டறிய முடியும். குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும்" என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மசோதாவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் நேற்று கடுமையாக குற்றம் சாட்டின.

நுகர்வோர் பாதுகாப்பு மசோதா அறிமுகம்

நுகர்வோர் பாதுகாப்பு மசோதா கடந்த டிசம்பரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் முடங்கியது. இதைத் தொடர்ந்து புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.

இந்த மசோதாவின்படி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்படும். நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் குறைகளை தீர்க்கவும் புதிய மசோதா வழிவகை செய்கிறது.

மேலும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) அதிக அதிகாரம் வழங்கும் என்ஐஏ மசோதாவும் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்களை குறிவைத்து நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து என்ஐஏ விசாரணை நடத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது.

அரசு கட்டிடங்களில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்ற வகை செய்யும் பொது கட்டிட திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் 8,663 புதிய பள்ளிகள்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க் மக்களவையில் நேற்று கூறியதாவது:

ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதிதாக 8,663 உயர்நிலைப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. பள்ளிகளில் 46,280 கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் புதிதாக 12,896 பள்ளிகள், 53,789 வகுப்பறைகள், 66,286 கழிப்பறைகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மேலும் 10,093 பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு துறைகளில் 3.81 லட்சம் பணியிடங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017 நிலவரப்படி மத்திய அரசு துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 32,38,397 ஆகும். கடந்த 2 ஆண்டுகளில் 3,81,199 பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி அரசு பணியிடங்களின் எண்ணிக்கை 36,19,596 ஆக உயர்ந்துள்ளது.

ரயில்வே துறையில் மிக அதிகபட்சமாக 98,999 பேர் புதிதாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 2017-ல் ரயில்வே துறை ஊழியர்களின் எண்ணிக்கை 12.7 லட்சமாக இருந்தது. இது தற்போது 13.69 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதேபோல பாதுகாப்பு, மத்திய போலீஸ் படைகள், நேரடி வரித் துறை, அணுசக்தி, விண்வெளி, வெளியுறவுத் துறை, கலாச்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x