

தத்தெடுத்து வளர்த்த முஸ்லிம் தாய் மறைவுக்கு, இந்து மதத்தைச் சேர்ந்த மகன் உருக்கமாக எழுதிய ஃபேஸ்புக் பதிவு வைரலாகி, படிப்பவர்களை கண்ணீர் சிந்த வைக்கிறது.
மனிதர்களின் அன்புக்கு மதம் தடையில்லை, இங்கு இருவரின் பாசமும் மதங்களைக் கடந்து நிற்கின்றன. இந்த இளைஞரின் பேஸ்புக் பதிவு ஆயிரக்கணக்கான முறை ஷேர் செய்யப்பட்டு, லட்சக்கணக்கானோர் படித்துள்ளனர். படிப்பவர்களின் மனதை சிலநேரங்களில் கனமாக்கிவிடும் இந்த பதிவு பலரையும் கண்ணீர் சிந்த வைத்து விடுகிறது.
மலப்புரம் மாவட்டம், கலிக்காவு பகுதியைச் சேர்ந்தவர் சுபைதா தென்னாட், அப்துல் அஜிஸ் ஹாதி தம்பதி. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சுபைதாவுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். முதுமையால் கடந்த செவ்வாய்கிழமை சுபைதா காலமானார்.
பல ஆண்டுகளுக்கு முன், சுபைதா வீட்டுக்கு அருகே குடியிருந்த ஒரு இந்து குடும்பத்தினர் திடீரென இறந்துவிட்டனர். அவர்களின் இரு பெண் குழந்தைகளையும், ஒரு ஆண் குழந்தையும் தத்தெடுத்த சுபைதா, தன்னுடைய குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்து வந்தார்.
அந்த ஆண் குழந்தையின் பெயர் ஸ்ரீதரன். அந்த இரு பெண் குழந்தைகளின் ரமணி, லீலா. ஸ்ரீதரனின் தாய் இறக்கும் போது அவருக்கு ஒரு வயது இருக்கும்.
ஒரே வீட்டில் 6 குழந்தைகளையும் வளர்த்து திருமணம் செய்து வைத்தபின்பே சுபைதா இறந்துள்ளார். ஆனால், சுபைதா தான் வளர்க்கும்போது, தான் தத்தெடுத்த 3 குழந்தைகளையும் மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை.
தங்களுடைய குழந்தைகள் மசூதிக்கு சென்றால், தத்தெடுத்த 3 குழந்தைகளையும் கோயிலுக்கு அனுப்பி சாமி கும்பிட வைத்தார். வீட்டில் தன்னுடைய 3 குழந்தைகள் புனித குர்-ஆன் படித்தால், மற்ற 3 குழந்தைகளும் பகவத் கீதை படிக்கும். ஒருபோதும் தங்களுடைய மதத்துக்கு அந்த குழந்தைகளை மாற்றாமல் வளர்த்து வந்தார் சுபைதா.
தன்னுடைய குழந்தைகளுக்கு திருமணம் செய்த சுபைதா, தத்தெடுத்து இரு பெண் குழந்தைகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்துவைத்தார். ஸ்ரீதரனுக்கு ஓமனில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால், சுபைதா கடந்த செவ்வாய்கிழமை காலமாகினார். இந்த செய்தி கேட்டு துடித்துப்போன ஸ்ரீதரன், தனது வளர்ப்புத் தாயா சுபைதா உயிரற்று கிடப்பதைப் பார்க்க முடியாமல் பேஸ்புக்கில் கண்ணீர் மல்க எழுதியுள்ளார்.
ஸ்ரீதரன் தனது ஃபேஸ்புக்கில் எழுதியள்ளதாவது:
என்னுடைய உம்மா(அம்மா)வை அல்லாஹ் அழைப்பின் பெயரில் கவுரவிக்கப்பட்டுள்ளார். அவரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். என் சிறுவயதில் என் தாய் இறந்தபின், என்னையும், என் சகோதரிகளையும் எடுத்து தன்னுடைய சொந்த குழந்தைகள் போல் வளர்த்து படிக்கவைத்து சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்தவர் என் உம்மா. எங்களுடைய பெற்ற தாய் இறந்தபோது அனைவரும் சிறுபிள்ளையாக இருந்தபோது, எங்களை மதம் மாற்றாமல், எங்கள் மதத்தையே நாங்கள் பின்பற்றுமாறுச் செய்து எங்களை வளர்த்தார்.
முஸ்லிம் வீட்டில் நாங்கள் இந்துக்களாகவே வளர்ந்தோம். எங்களை ஒருபோதும் மதம்மாற்ற என் உம்மா முயற்சிக்கவில்லை. அவர் எங்களுக்கு வளர்ப்புத் தாய் அல்ல, அவர்தான் என் தாய்.
என் உம்மா இறந்த செய்தி கேட்டு அறையின் நான்கு சுவர்களில் முட்டிமோதி அழுதேன், கண்ணீர் விட்டேன். என் உம்மாவுக்கு அன்பளிப்பாக அளிக்க ஏராளமான வாசனைத்திரவியங்களை வாங்கி வைத்திருந்தேன். இப்போது நான் என்னுடைய சொந்த ஊருக்குச் சென்று உயிரற்ற என்னுடைய உம்மா உடலைக் காண எனக்கு துணிச்சல் இல்லை. என்னுடைய உம்மாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் " இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
சமூக சேவகரும்,சொற்பொழிவாளருமான ஏ.பி.அகமது கூறுகையில், " சொர்க்கம் இருந்தால், நிச்சயம் சுபைதாவுக்கு உறுதியாக இடம் இருக்கும். இன்றைய சூழலில் கட்டாய மதமாற்றம் ஆங்காங்கே நடக்கும் போது, சுபைதாவின் குணம் கொண்டாடப்பட வேண்டியது " எனத் தெரிவித்துள்ளார்