

கர்நாடகத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்த எம்எல்ஏக்கள் 11 பேர் திடீரென இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்து ஆளுநர் மாளிகையில் கடிதம் அளித்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி கவிழும் சூழல் நீடிக்கிறது.
ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் விவரம்: ஹெச் விஸ்வநாத்(ஜேடியு), மகேஷ் குமார் கும்தாலி(காங்), பிசி பாட்டீல்(காங்), ரமேஷ் ஜர்கிகோலி(காங்), ஷிவராம் ஹெப்பர்(காங்), நாராயன் கவுடா(ஜேடிஎஸ்), கோபாலியா(ஜேடிஎஸ்), எஸ்டி சோம்சேகர்(காங்), முனிரத்னா(காங்), பிரதீப் கவுடா(காங்), பைரதி பசவராஜ்(காங்)
கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து, ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன. முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்து வருகிறார்.
225 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணியில் 117 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 79 எம்எல்ஏக்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 37 எம்எல்ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சியில் ஒரு எம்எல்ஏவும் உள்ளனர்.
பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளையும், காங்கிரஸ் , ஜேடிஎஸ் தலா ஒரு தொகுதியையும் வென்றது. சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததால், இரு கட்சியின் நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் குமாரசாமியை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் பலர் ஏற்கவில்லை, வெளிப்படையாகவே கடுமையாக விமர்சனம் செய்துவந்தனர். இதனால், பலஇடங்களில் முதல்வர் குமாரசாமி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதனால் ஜேடியு, காங்கிரஸ் இடையே கடும் உரசல் உள்ளுக்குள் இருந்து வந்தது.
கடந்த மே மாதத்தில் இரு்ந்து முறை காங்கிரஸ் தலைமையிடத்தில் இருந்து வந்து நிர்வாகிகள் சமாதானப்பேச்சு நடத்தினார்கள். இதற்கிடையே உட்கட்சி பூசல் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்து மாநிலப் பொறுப்பாளர் உத்தரவிட்டார்.
இந்த சூழலில் காங்கிரஸ், ஜேடியு கட்சியைச் சேர்ந்த 8எம்எல்ஏக்கள் முன்னாள் ஜேடியு தலைவர் விஸ்வநாத் தலைமையில் இன்று காலை 11 மணிஅளவில் சபாநாயகர் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு சட்டப்பேரவைச் செயலாளர் விசாலாட்சியிடமும், சபாநாயகரின் தனித்துறை செயலாளர் ரூபஸ்ரீயிடம் தங்களின் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். எம்எல்ஏக்கள்11 பேரும் ராஜினாமா கடிதத்தை அளித்தநேரத்தில் சபாநாயகர் அவரின் சேம்பரில் இல்லை.
11 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்ததை அறிந்த மாநில நீர்பாசனத் துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவக்குமார் தலைமைச் செயலகம் வந்து, 11 எம்எல்ஏக்களுடன் பேச்சுநடத்தினார். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதாகவும், ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறும்படியும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், எம்எல்ஏக்கள் 11 பேரும் சபாயநாகர் ரமேஷ் குமாரை சந்திக்க ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அவரின் சேம்பரில் காத்திருந்தனர் ஆனால் அவர் வராததால், அங்கிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்திக்க திட்டமிட்டு சென்றனர்.
இதற்கிடையே சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமாரிடம் நிருபர்கள் எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்துக் கேட்டபோது அவர் கூறுகையி்ல் " 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை என் அலுவலகத்தில் அளித்ததாக கூறுகிறார்கள். என் அலுவலகத்துக்கு எம்எல்ஏக்கள் வந்தது எனக்கு தெரியாது.
எனக்கு முன்கூட்டியே திட்டமிட்ட பல்வேறு வேலைகள் இருப்பதால், நான் செவ்வாய்க்கிழமைதான் அலுவலகத்துக்குவந்து கடிதங்களை பார்க்க முடியும். என்னைச் சந்திக்க வருவதற்கு முன் எந்த எம்எல்ஏவும் என்னிடம் முன்அனுமதி பெறாத போது நான் எவ்வாறு பார்க்க முடியும். நான் என்னுடைய அரசமைப்புக் கடமைகளை தவறாமல் செய்வேன். என்னுடைய அலுவலகம் கடிதத்தை பெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்காக எம்எல்ஏக்கள் கோபித்துக்கொண்டு ராஜ் பவன் சென்றாலும், ராஷ்ட்ரபதி பவன் சென்றாலும் எனக்கு கவலையில்லை " எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே ஜேடியு கட்சியின் தலைவர் தேவேகவுடா தனக்கு மாநில அரசியலில் நடக்கும் எந்த சம்பவங்களும் தனது பார்வைக்கு வரவில்லை. இனிமேல் எம்எல்ஏக்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவேன். சபாநாயகர் முடிவு செய்தபின் அதன்பின் நான் முடிவு எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.