Last Updated : 10 Jul, 2019 11:39 AM

 

Published : 10 Jul 2019 11:39 AM
Last Updated : 10 Jul 2019 11:39 AM

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு: நாளை விசாரணை

கர்நாடக சபாநாயகர் தங்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளாமல் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நடக்கிறார் என்று குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் அதிருப்தி காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓராண்டாக முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. முதல் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி  ராஜினாமா திடீரென ராஜினாமா செய்தனர்.

அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேரையும் பாஜக நிர்வாகிகள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்று சொகுசு ஓட்டலில் தங்க வைத்துள்னர். அதிருப்தி எம்எல்ஏக்களை சமாளிக்கும் வகையில், அவர்களுக்கு அமைச்சர் பதவியை விட்டுத்தரும் வகையில் ஒட்டு மொத்தமாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.  

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜி னாமா கடிதங்களை பரிசீலித்த பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் , 8 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் விதிமுறைக்கு மாறாக இருக்கிறது எனக் கூறி அதை ஏற்க முடியாது எனக் கூறி நிராகரித்து விட்டார்.

மேலும், இதில் 5 எம்எல்ஏக்களும் சாபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதங்கள் நிராகரிக்கப்பட்ட 8 எம்எல் ஏக்களும் சபாநாயகரை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கடிதம் அளித்தால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

இதற்கிடையே அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சமாதானப் பேச்சு நடத்தும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக அமைச்சருமான டி.கே. சிவக்குமார் இன்று மும்பை சென்றார். மும்பையில் தனியார் ஒட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க சிவக்குமார் முயன்றபோது அவர்களை போலீஸார் ஓட்டலுக்குள் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்த சூழலில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆகியோர் இணைந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், " நாங்கள் 13 பேரும் எங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தபின்பும், எங்களின் கடிதத்தை ஏற்க சபாநாயகர் மறுக்கிறார். இது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அரசைமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமையை செய்யாமல் சபாநாயகர் புறக்கணிக்கிறார். எங்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலித்து ஏற்க உத்தரவிட வேண்டும் " எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு அவசரவழக்காக விசாரிக்க கோரப்பட்ட நிலையில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x