Published : 12 Jul 2019 08:07 PM
Last Updated : 12 Jul 2019 08:07 PM

தேர்வு செய்யப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரசின் அன்றாட நடவடிக்கை, நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை என கிரண்பேடி வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

புதுச்சேரியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகளை எதிர்த்தும், அரசு நிர்வாகத்தில் அவரது தலையீட்டை  எதிர்த்து லட்சுமி நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,

ஆளுநருக்கு தனி அதிகாரமில்லை. முதல்வர், அமைச்சர்களின் ஆலோசனையின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு தான் செயல்பட வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

கொள்கை ரீதியான விஷயங்களுக்கு மட்டுமே ஆளுநரின் அனுமதியை பெற வேண்டும் மற்ற விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் அது தொடர்பான கோப்புகளை அனுப்ப தேவையில்லை எனவும் அதன் சாராம்சத்தை தெரிவித்தால் போதும்,  அதேபோல ஆளுநரின் உத்தரவின் பேரில் செயலாளர்கள் செயல்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில்,  துணைநிலை ஆளுநர் அதிகார விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தது.

மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை அமைச்சகம் தரப்பில் வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “டெல்லிக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் புதுச்சேரிக்கு தீர்ப்பு வழங்க முடியாது, ஏனெனில் டெல்லிக்குள்ள சிறப்பு அதிகாரம் வேறு.

எனவே இதை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறிவிட்டது. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் விவகாரங்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தலையிடக்கூடாது என்ற சென்னை  உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்”  என கோரினார்.

இந்நிலையில், புதுவை துணைநிலை ஆளுநர்  கிரண்பேடி தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாக ரீதியிலான அதிகாரம்”  என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் உள்ளன. எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை,

அரசு அதிகாரிகள் அனைவரும் புதுவை அரசின் உத்தரவுபடி மட்டுமே நடக்க வேண்டும் என மாநில அரசு அனைத்து செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

இது மிரட்டும் தொனியில் உள்ளது, எனவே சென்னை உயர்நீதிமன்றம் துணை நிலை ஆளுநருக்கு அரசின் அன்றாட நடவடிக்கை, நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை என்று வழங்கிய  உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கில் புதுவை முதல்வர் தரப்பை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கும் நிதி மற்றும் நிலம் டிரான்ஸ்பர் தொடர்பான முடிவுகளை அமல்படுத்தக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து,  கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு சென்னை  உயர்நீதிமன்றத்தை அணுகவும்  மனுதாரர்களுக்கு அனுமதியளித்தனர்.  உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் புதுவை அமைச்சரவை முடிவுகளை செயல்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x