Published : 06 Jul 2019 07:23 AM
Last Updated : 06 Jul 2019 07:23 AM

மாத ஊதியம் பெறுவோரை மட்டும் கசக்கிப் பிழிவது ஏன்..?

‘இந்த முறை எப்படியும் நல்லது நடக்கும்' - இதுதான் மாத ஊதியம் பெறுவோரின் எதிர்பார்ப்பு. ஆனால், வழக்கம் போல இவ்வாண்டும், நிதிநிலை அறிக்கையில், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

முறையாக அரசுக்கு வரி கட்டுகிற பிரிவினர், தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் செய்த பாவம்தான் என்ன...? முதலீட்டாளர்கள், செல்வந்தர்கள், அந்நியச்செலாவணி ஈட்டுவோர், அரசின் தொழிற் கொள்கையால் பயன் பெறுவோர் என்று பல பிரிவினருக்கும் இயன்ற வரை சலுகைகள் வழங்கத் தயாராக இருக்கும் திட்ட வடிவமைப்பாளர்கள், மாத ஊதியம் பெறுவோரை மட்டும் கசக்கிப் பிழிவதேன்...? நடுத்தர, கீழ்நடுத்தர நிலை மக்கள் படும் பாடு குறித்து, இவர்களுக்கு ஏன் இந்தப் பாராமுகம்..?

நமக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.

சமுதாயத்தில் மிக அதிக விழிப்புணர்வு கொண்ட, பல சமயங்களில் கேள்வி கேட்கத் தயங்காத, ஜனநாயக உரிமைகளை முழுவதுமாகக் கோரிப் போராடுகிற வர்க்கமாக இவர்கள் இருக்கிறார்கள். முற்றிலும் ஜனநாயக ரீதியில், ஆரோக்கியமான வழிகளில் இவர்கள் செயல் பட்டாலும் கூட, 'வேண்டாதவர்கள்' என்றுதான் உயர் அதிகார வர்க்கம் இவர்களை நோக்குகிறது. பிறகு எப்படி 'சலுகைகள்' கிடைக்கும்..?

நேரடியாக வரிச் சலுகைதான் கிட்டவில்லை; பரவாயில்லை. மேலும் சுமை ஏற்றாமல் இருக்கலாமே...! அதுவும் இல்லை.

ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி செய்தால் வரிச்சலுகை; டீசல், பெட்ரோல் வாங்கினால், ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி. இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது...?

250 கோடி ரூபாய் வரை ஆண்டு வியாபாரம் உள்ள நிறுவனங்களுக்கு 25% வரி இருந்தது. இதற்கு மேற்பட்ட வியாபாரம் இருந்தால்....? 30% வரி கட்ட வேண்டும். தற்போது இந்த அளவு, 400 கோடி ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. அதாவது, 250 கோடியில் இருந்து 400 கோடி வரை வியாபாரம் உள்ளவர்களும் இனி 25% வரி கட்டினால்போதும். ஐந்து சதவீதம் வரி, குறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் உள்ள சுமார் 99% நிறுவனங்கள் இந்த அளவுக்குள் வந்து விடும். வரிச் சலுகை தருவதைக் குறை சொல்லவில்லை. ஆனால் இந்தச் சலுகை காரணமாக அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா...?

அதாவது, இந்தச் சலுகையின் பயன் ஏதேனும் ஒரு வகையில் 'கீழ் இறங்கி வருமா..'?

அப்படி எந்த நிபந்தனையும் இல்லை; எந்த உத்தரவாதமும் இல்லை. இதுதான் போகட்டும். நேரடியாகப் பயன் தருகிற திட்டங்களுக்கு என்ன முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது...?

நதி நீர் இணைப்பு, இளைஞர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்புத் திட்டம், உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி, அதிகாரப் பகிர்வு, அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் உயர்தர மருத்துவ சிகிச்சை, எல்லா நிலைகளிலும் கட்டணம் இல்லாக்கல்வி வசதிகள்... என்று ஏதேனும் ஒரு, நேரடித் திட்டம் குறித்த அறிவிப்பேனும் உண்டா...?

பல நல்ல திட்டங்கள், அரசால் முன் வைக்கப்பட்டுள்ளன. மறுப்பதற்கில்லை. 'உள்நாட்டு நீர்ப் போக்குவரத்துச் சேவை', 'ஆண்டு வியாபாரம் 3 கோடிக்கு உட்பட்ட, சில்லரை வணிகர்களுக்கு ஓய்வூதியம்', '2022க்குள் எல்லாருக்கும் வீடு', '10,000 விவசாயக் குழுக்கள்', '256 மாவட்டங்களின் 1592 ஒன்றியங்களில் தண்ணீர் வசதி', 'எல்லாக் குடும்பங்களுக்கும் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு' ('ஹர் கர் ஜல்') ஆகியன மிக நல்ல, வரவேற்கத் தகுந்த, மிகச் சிறந்த திட்டங்கள் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.

வாடகைச் சட்டங்களில் சீர்திருத்தம், விண்வெளிச் செயல்பாடுகளை வணிக ரீதியாகப் பயன்படுத்துதல், மூங்கில், தேன் மற்றும் கதர்ப் பொருட்களுக்கான ஊக்கம், 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம், விளையாட்டுக் கல்வி வாரியம் ஆகியனவும் நீண்ட கால நன்மை பயக்கும் நல்ல திட்டங்கள்தாம்.

ஆனால்.... இவை எல்லாம் இடையில் பல சவால்கள், சங்கடங்களைக் கடந்து, முறையாகச் செயல்படுத்தப்பட்டு, நிறைவாய், அதன் நன்மைகள் வந்து சேர வேண்டும்.

சாமான்யனுக்கு ஒரு நல்லது கிடைக்க வேண்டும் என்றால், அவன் காத்துக் கிடக்க வேண்டும். இதுவே நிறுவனங்கள் மட்டும், அறிவிப்பு அமலாகும் நாளில் இருந்தே, பயன்களை அனுபவிக்கலாம்.

திட்டம் வகுப்பவர்களின் இந்த அணுகுமுறை, மிகுந்த மன வருத்தம் தருகிறது. யாருக்குப் பயன் எத்தனை சீக்கிரம் சென்று சேர்கிறது என்பது குறித்து இன்னமும் தீர்க்கமாகச்சிந்தித்துச் செயல்பட வேண்டி உள்ளது. இதுவே, இவ்வாண்டு நிதி நிலை அறிக்கை நமக்கு உணர்த்தும் செய்தி.

நிதிநிலை அறிக்கையை ஆதரித்தும், எதிர்த்தும் அறிக்கைகள் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால்...., தேர்தல் முடிவுகளைப்போலவே, 'பட்ஜெட்' அறிவிப்பைக் கேட்டும், சாமான்யர்கள் தெருவுக்கு வந்து உற்சாகத்துடன் துள்ளிக் குதிக்கிற நாள், ஜனநாயகக் குடியரசில் சாத்தியம் இல்லையா என்ன....?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x