Published : 06 Jul 2019 08:34 AM
Last Updated : 06 Jul 2019 08:34 AM

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயனடையும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினர் கருத்து

ஸ்டார்ட் அப் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட்  இருப்பதாக நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) கருத்து தெரிவித்துள்ளது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு சிஐஐ சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தொழில்துறையினர் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தெரிவித்த கருத்துகள் வருமாறு:

சஞ்சய் ஜெயவர்த்தனவேலு (சிஐஐதென்மண்டலத் தலைவர்):

இந்த பட்ஜெட் பல்வேறு சாதக அம்சங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பணப்புழக்கம் தொடர்பான அறிவிப்புகள் நிறுவனங்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும்.  தொழில் நிறுவனங்களின் வரிவிகிதம் குறைக்கப்பட்டிருப்பது இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சம் ஆகும்.

அதேபோல், உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும்.

எஸ். மாகாலிங்கம் (சிஐஐ முன்னாள்  தலைவர்):

ஸ்டார்ட் அப்களுக்கான வரிச் சலுகை இந்த பட்ஜெட்டின் குறிப்பிடத்தகுந்த அம்சமாக உள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பில் பொது மற்றும் தனியார்  துறைகளின் கூட்டு பங்களிப்பை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்புகள் நாட்டு வளர்ச்சியில் முக்கிய மாற்றங்களை உருவாக்கும். வரி ஆய்வு முறையில் மின்னணு சோதனை முறை கொண்டுவரப்படுவது வரவேற்கத்தகுந்த திட்டம் ஆகும்.

எஸ்.சந்திரமோகன்  (தலைவர், சிஐஐ, தமிழ்நாடு):

ஊரக வளர்ச்சி சார்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வரவேற்கத்தகுந்ததாக உள்ளன. சாலை மேம்பாட்டுத் திட்டம், நகர கட்டமைப்பு திட்டம் போன்றவை இந்த பட்ஜெட்டின் குறிப்பிடத்தகுந்த அம்சங்களாக உள்ளன.  சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அந்நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக அமையும்.

கமல் பாலி (வால்வோ இந்தியா குழுமத்தின் தலைவர்):

நாட்டின் உள்கட்டமைப்பு சார்ந்து அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டங்கள் தொழில் நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக அமையும். மட்டுமல்லாமல், இந்த திட்டங்களின் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். அதேபோல் மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகளை அந்த துறைசார்ந்த தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதாக அமையும். அதுசார்ந்தும் வேலைவாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி துறை சார்ந்து குறிப்பிடத்தகுந்த திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. அது இந்தப் பட்ஜெட்டின் சிறிய குறைபாடாக உள்ளது.

என். முத்துகுமார்  (ஆட்டோமோட்டிவ் ஆக்ஸில் நிறுவனத்தின் தலைவர்):

சுற்றுலாத் துறை மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு சார்ந்த திட்டங்கள்  இந்த பட்ஜெட்டின் குறிப்பிடத்தகுந்த திட்டங்கள் ஆகும். கல்வி ஆய்வு சார்ந்து அறிவிக்கப்பட்டிருக்கிற திட்டம் வரவேற்கத்தகுந்த ஒன்றாக உள்ளது.

வினய் லக்‌ஷ்மன், (ரானே பிரேக் லைனிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்):

ஊரக வளர்ச்சி திட்டம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றக்கூடியதாக அமையும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கக் கூடியதாக உருவாகி வருகின்றன. இந்த பட்ஜெட்டில் ஸாட்ர்ட் அப் தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் அதிக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த பட்ஜெட்டில் டெக்ஸ்டைல் துறை சார்ந்து எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் அதுகுறித்துகேட்கப்பட்டபோது, தற்போது வந்திருப்பது பட்ஜெட் சார்ந்த மேலோட்டமான வரையறைதான். எனவே,  விரிவான தகவல்கள் வந்த பிறகே இந்த பட்ஜெட்டின் தன்மையை முழுமையாக அறியமுடியும் என்று கூறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x