பாஜக உறுப்பினர் சேர்க்கை: தெலங்கானாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

பாஜக உறுப்பினர் சேர்க்கை: தெலங்கானாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

பாஜக நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளான வரும் 6-ம் தேதி அன்று தெலங்கானாவில் உறுப்பினர் சேர்க்கையை கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா தொடங்கி வைக்கிறார்.

மாநிலத்தில் உள்ள தலைவர்களுடனும், முக்கிய உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தும் அமித் ஷா பாஜகவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் அறிவிக்க உள்ளார்.

அன்றைய தினம், உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமர் மோடி, பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்கிறார்.

தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் கே. லக்ஸ்மன் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "வரும் 6-ம் தேதி கட்சியின் நிறுவனர் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளன்று உறுப்பினர் சேர்க்கையை தெலங்கானாவில் தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார்.

மாநிலத்தில் வரும் 2023-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. அதற்கு எவ்வாறு தயாராவது, திட்டங்கள், இலக்குகளை வகுப்பது எவ்வாறு அடைவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்" எனத் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் டெல்லி வந்திருந்த லக்ஸ்மன், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது லக்ஸமனிடம் பேசிய அமித் ஷா " 2023-ம் ஆண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு எதிராக கடுமையாகப் போராட வேண்டும். டிஆர்எஸ் கட்சியை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பாக குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும்" என்று கூறியதாக லக்ஸ்மன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in