மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை வெளியிடுங்கள்: பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை வெளியிடுங்கள்: பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
Updated on
2 min read

மத்திய அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட முடியாது என்று கூறுவது சரியல்ல. அதை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம்(சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சதுர்வேதி கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிரதமர் அலுவலகத்திடம் மனு அளித்தார். அதில் மத்திய அமைச்சர்கள் மீது கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்போது வரை என்னென்ன ஊழல் புகார்கள் வந்துள்ளன என்பது குறித்த விவரங்களை வழங்க வேண்டும் எனக் கோரினார்.

இந்த மனுவுக்கு 2017-ம் ஆண்டு அக்டோபரில் பதில் அளித்த பிரதமர் அலுவலகம், மனுதாரர் கேட்கும் விவரங்கள் பொதுவாகவும், தெளிவற்றதாகவும் இருக்கிறது. ஆதலால், மனுதாரர் கேட்கும் விவரங்களை வழங்க முடியாது எனத் தெரிவித்தது.

இதை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்திடம் மீண்டும் சதுர்வேதி மேல்முறையீடு செய்தார்.  அதில், பிரதமர் அலுவலகம் தான் கேட்கும் முழுமையான, குறிப்பிட்ட விவரங்களை அளிக்க மறுக்கிறது. அதை வழங்க உத்தரவிடக் கோரினார்.

அந்த மனுவை விசாரித்த  மத்திய தகவல் ஆணையத் தலைவர், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறப்பித்த ஆணையில் மனுதாரர் கேட்கும் விவரங்களை பிரதமர் அலுவலகம் 15 நாட்களில் அளிக்க உத்தரவிட்டார்.

ஆனால், அந்த உத்தரவையும் ஏற்க மறுத்து விவரங்களை வெளியிட பிரதமர் அலுவலம் மறுத்து பதில் அளித்தது. அந்த பதிலில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7(9)ன்கீழ் மனுதாரர் கேட்கும் விவரங்களை வழங்க இயலாது.

மத்திய அமைச்சர்களுக்கு எதிராகவும், பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும், பல்வேறு அலுவலகங்களுக்கு எதிராகவும்  பல்வேறு விவகாரங்கள் தொடர்பான புகார்கள் பிரதமர் அலுவலகத்துக்கு வருகின்றன. அந்தப் புகார்களை வெளியிடுவது அளவில் மிகப்பெரியது. ஆதலால், விவரங்களை வெளியிட முடியாது என மறுத்தது.

பிரதமர் அலுவலகம் அளித்த பதிலுக்கு எதிராக மீண்டும் மத்தியத் தகவல் ஆணையரிடம் சதுர்வேதி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை கடந்த ஏப்ரல் 23 மற்றும் ஜூலை 17-ம் தேதி தலைமை தகவல் ஆணையர் சுதிர்பார்கவா விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையின் முடிவில் கடந்த 1-ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், மனுதாரர் கேட்கும் விவரங்களை ஆர்டிஐ சட்டம் பிரிவு 18-ன்கீழ் தாக்கல் செய்துள்ளார். ஆதலால், பிரதமர் அலுவலகம், ஆர்டிஐ சட்டம் பிரிவு 7(9)ன் கீழ் தகவல்களை வழங்க மறுக்க முடியாது. மனுதாரர் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை அவர் கேட்ட வடிவத்திலேயே வழங்குவதற்கான விவரங்கள் அதிகமாக இருந்தால் அதை அப்படியே வழங்க  வேண்டும் என்பதும் இல்லை. அதேசமயம், மனுதாரர் கேட்ட விவரங்களை வழங்க முடியாது என்றும் கூறுவதற்கும் அதிகாரம் இல்லை.மனுதாரர் கேட்ட விவரங்களை வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in