Published : 13 Jul 2019 08:33 AM
Last Updated : 13 Jul 2019 08:33 AM

நாடாளுமன்ற துளிகள்: ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நிராகரிப்பு

பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 நீதிமன்றம்

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக நிர்பயா நிதியில் இருந்து ரூ.767.25 கோடி ஒதுக்கப்படுகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்தை பாதுகாக்க சிறார் நீதி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாட்டில் 19.47 லட்சம் மருத்துவர்கள்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ச வர்தன் மக்களவையில் நேற்று அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் அலோபதி, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி துறைகளைச் சேர்ந்த 19.47 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். இதில் 11,59,309 பேர் அலோபதி மருத்துவர்கள் ஆவர். இவர்களில் 9.27 லட்சம் மருத்துவர்கள், மருத்துவ சேவையாற்றி வருகின்றனர். ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி துறைகளில் 7.88 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். இதில் 6.30 லட்சம் பேர் மட்டுமே மருத்துவ சேவையாற்றி வருகின்றனர்..

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி 1000 பேருக்கு ஒரு அலோபதி மருத்துவர் சேவையாற்ற வேண்டும். ஆனால் இந்தியாவில் 1456 பேருக்கு ஒரு அலோபதி மருத்துவர் என்ற நிலையே உள்ளது. எனினும் ஒட்டுமொத்த மருத்துவர்களைக் கணக்கிடும்போது 867 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார்.

நாட்டில் புற்றுநோய் பாதிப்பு மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த நோய்க்கான சிகிச்சை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மருந்து நிறுவனங்களிடம் இருந்து மருத்துவர்கள் பணம், பரிசுகள் பெறுவது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றங்களில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நிராகரிப்பு

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை சேர்ந்த விஜய் சாய் ரெட்டி இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அந்தந்த சமுதாயங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மசோதாவில் கோரப்பட்டிருந்தது. இந்த மசோதா குறித்து மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்த எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர். மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு எம்.பி. விஜய் சாய் ரெட்டியை கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஏற்கவில்லை.இதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதா நிராகரிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x