Last Updated : 12 Jul, 2019 03:48 PM

 

Published : 12 Jul 2019 03:48 PM
Last Updated : 12 Jul 2019 03:48 PM

சித்தாந்த ரீதியாக போரிட வாய்ப்பளித்த ஆர்எஸ்எஸ்,பாஜகவுக்கு நன்றி: ராகுல் காந்தி பேட்டி

சித்தாந்த ரீதியாக  போரிடுவதற்கு வாய்ப்பு அளித்த ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எனது நன்றிகள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஏப்ரல் 23-ம் தேதி ஜபல்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஒரு கொலைக் குற்றவாளி என்று குற்றம்சாட்டினார். இது குறித்து  பாஜக நகராட்சி கவுன்சிலர் கிருஷ்னாவதன் பிரம்பாட் அகமதாபாத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 அதில் அமித் ஷா சொராபூதீன் வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது அவதூறாக ராகுல் காந்தி பேசியுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.  இந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, அனைத்து திருடர்கள் பெயருக்கு பின்பும் மோடி என்ற பெயர் இருக்கிறது. நீரவ் மோடி, லலித் மோடி என்று மோடி என்ற சமூகத்தை குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த பேச்சு தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வரும் 16-ம்தேதிக்குள் ராகுல்காந்தி நேரில் ஆஜராகக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி 5 நாட்களில் ரூ.750 கோடி மாற்றியது. மிகப்பெரியஊழல் என ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். அதுகுறித்து அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர் அஜய் படேல், அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

இந்த வழக்கு  அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேடே நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக விமானம் மூலம் இன்று காலை அகமதாபாத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தார். அவரை காங்கிகரஸ் நிர்வாகிகள் பூங்கொடுத்து வரவேற்றனர்.

அப்போது நிருபர்களிடம் ராகுல் காந்தி பேசுகையில்  " என் மீது தொடரப்பட்டுள்ள அவமதிப்பு வழக்கை சந்திப்பதற்காக இன்று நான் இங்கு வந்துள்ளேன். அடுத்த வழக்கையும் என் மீது தொடர அரசியல் எதிரிகளான பாஜக, ஆர்எஸ்எஸ் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் என்னைப் பொருத்தவரை எனக்கு ஒரு தளத்தையும், வாய்ப்பையும் அளித்து, சித்தாந்த ரீதியாக மக்களுக்காக போரிடுவதற்கு வாய்ப்புளித்த ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். உண்மை வெல்லும்" எனத் தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x