Last Updated : 09 Jul, 2019 08:49 AM

 

Published : 09 Jul 2019 08:49 AM
Last Updated : 09 Jul 2019 08:49 AM

கர்நாடகாவில் ஆட்சியை காப்பாற்ற பதவியை ராஜினாமா செய்ய தயார்: துணை முதல்வர் பரமேஷ்வர், டி.கே.சிவகுமார் அறிவிப்பு

கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை காப்பாற்றுவதற்காக தங்களது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக துணை முதல்வர் பரமேஷ்வரும், அமைச்சர் டி.கே.சிவகுமாரும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இதுவரை 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சியை காப்பாற்றுவது குறித்து துணை முதல்வர் பரமேஷ்வரும், நீர்வளத்துறை அமைச்சர்சிவகுமாரும் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பின்னர் பரமேஷ்வர் கூறியதாவது: எங்களது கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும் என பாஜக துடித்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக காங்கிரஸ் மஜதவை ஆதரித்தது. இந்த சூழ்நிலையில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிரான முடிவை எடுத்துள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். இந்த கூட்டணி ஆட்சியை காப்பாற்றுவதற்காக எனது துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். கட்சி மேலிடம் கூறினால் எந்த தியாகத்தையும் செய்வேன். இவ்வாறு பரமேஷ்வர் கூறினார்.

இதையடுத்து டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘‘மத்தியில் ஆளும் பாஜக அதிகார பலத்தைக் கொண்டு எங்களது எம்எல்ஏக்களை அவர்கள் பக்கம் இழுத்துள்ளது. இதற்கு தக்க பாடம் புகட்டுவோம். இப்போதைக்கு ஆட்சிக்கு வந்திருக்கும் ஆபத்தை களைவது குறித்து பேசி வருகிறோம். ஆட்சி நிலைப்பதற்காக எனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். மூத்த எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி போன்றோருக்காக எனது பதவியை விட்டுத்தர தயாராக இருக்கிறேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x