

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கறிஞர்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததால், இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் நிதிகளை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த சோதனை நடத்தப்படுகிறது
மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர், என்ஜிஓ வழக்கறிஞர்கள் ஆகியோரின மும்பை, டெல்லி இல்லங்கங்களிலும், அலுவலங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. இவர்கள் நடத்தும் அறக்கட்டளையோடு தொடர்புடைய வழக்கறிஞர்கள் நடத்தும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.
டெல்லி நிஜாமுதீன் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்திரா ஜெய்சிங் வீடுகள், அலுவலகங்களிலும் இந்த ரெய்டு நடந்து வருகிறது
வெளிநாடுகளில் இருந்து அறக்கட்டளைக்கு நிதி பெற்ற விவகாரத்தில் ஆனந்த் குரோவர் மீது புகார் எழுந்து சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்தும் புகார்களை சிபிஐ பெற்றதால் இதை சிபிஐ தீவிரமாகக் கருதியது.
இவர்கள் இருவர் மீதும் 2006 முதல் 2015-ம் ஆண்டுவரை ரூ.32 கோடி வெளிநாடுகளில் இருந்து நிதியை முறைகேடாக எப்சிஆர்ஏ விதிமுறைகளைப் பின்பற்றாமல் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் விதிமுறைகளை மீறியிருப்பதற்கான முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் குரோவர், ஜெய்சிங்கிடம் விளக்கம் கேட்டது. அவர்கள் அளித்த விளக்கம் மனநிறைவோடு இல்லை என்பதால், அவர்கள் நடத்தும் அறக்கட்டளையின் அங்கீகாரம் 2016, நவம்பர் மாதம் ரத்து செய்யப்பட்டது.
இந்த சோதனை குறித்து இந்திரா ஜெய்சிங், குரோவர் கூறுகையில், " பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததாலும், எங்களை பழிவாங்கும் நோக்கில் இது நடக்கறது " எனத் தெரிவித்தார்.
ஆனால் வெளிநாடுகளில் இருந்து விதிமுறைகளை மீறி நிதிகளை பெற்றது தொடர்பாக இந்திரா ஜெய்சிங், குரோவர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றமே நோட்டிஸ் அளித்து கடந்த மே மாதம் விளக்கம் கேட்டது குறிப்பிடத்தக்கது.