

குஜராத் மாநிலத்தில் காலியாக இருக்கும் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது.
குஜராத்தின் காந்திநகரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் அறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
பாஜகவின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த அமித் ஷா, ஸ்மிதி இரானி ஆகியோர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், அவர்கள் தங்களின் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்குரிய இரு இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
மாநில அமைச்சர்கள் சவுரவ் படேல், பிரதீப்சின்ஹ் ஜடேஜா, பாஜக எம்எல்ஏ அருண்சின்ஹா ராணா உள்ளிட்ட சிலர் காலையிலேயே வாக்களித்தனர்.
காலியாக இருக்கும் 2 இடங்களில் பாஜக சார்பில் வேட்பாளர்களாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஓபிசி தலைவர் ஜுக்ராஜி தாக்கூரும் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் சந்திரிகா சுதாஸமா, கவுரவ் பாண்டியா வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். வேட்பாளர்கள் வெற்றிக்கு குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும், அதாவது 88 வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றால்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக ஏதேனும் சிக்கல் ஏற்படுத்தலாம் என்பதால், காங்கிரஸ் கட்சி தங்களின் 71 எம்எல்ஏக்களில் 65 பேரை பனாஸ்கந்தா எனும் இடத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று கடந்த 2 நாட்களாக வைத்திருந்தது. இன்று காலை 10 மணிக்கு மேல் எம்எல்ஏக்கள் வாக்களிக்க அழைத்து வரப்படுகின்றனர்.
குஜராத் சட்டப்பேரவையில் மொத்தம் 182 எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட வாக்களிக்க 175 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். இதில் பாஜகவுக்கு 100 எம்எல்ஏக்கள் பலமும், காங்கிரஸ் கட்சிக்கு 71 எம்எல்ஏக்கள் பலமும் இருக்கிறது.
பாரதிய பழங்குடிகள் கட்சி சார்பில் 2 எம்எல்ஏக்களும், என்சிபி சார்பில் ஒரு எம்எல்ஏவும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் உள்ளனர். 3 எம்எல்ஏக்கள் பல்வேறு காரணங்களால் இடைத்தேர்தலில் வாக்களிக்க முடியாத வகையில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 எம்எல்ஏக்களுக்கான இடங்கள் காலியாகி இருக்கின்றன.