Last Updated : 01 Jul, 2019 03:50 PM

 

Published : 01 Jul 2019 03:50 PM
Last Updated : 01 Jul 2019 03:50 PM

எஸ்.சி. பிரிவில் 17 சமூகத்தினரை இணைத்தது சட்டவிரோதம், மோசடி: உ.பி. அரசு மீது மாயாவதி சாடல்

உத்தரப் பிரதேசத்தில் ஓபிசி பிரிவில் இருந்த 17 சமூகத்தினரை எஸ்.சி. பிரிவில் சேர்த்த முதல்வர் ஆதித்யநாத் அரசின் செயல் சட்டவிரோதம், மிகப்பெரிய மோசடி என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். கடந்த வாரம் ஓபிசி பிரிவில் இருந்த நிசாத், பிந்த், மல்லா, காஷ்யப், பார், பாதம், பிராஜபதி, ராஜ்பர் உள்ளிட்ட 17 சமூகத்தினரை எஸ்.சி. பிரிவில் இணைத்து முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார். இந்த உத்தரவில் ஓபிசி பிரிவில் மிகப்பெரிய வெற்றிடம ஏற்பட்டுள்ளது. மேலும், இட ஒதுக்கீடு மட்டுமின்றி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீதத்தையும் பெறுவார்கள்.

இந்த 17 சமூகத்தினரை எஸ்.சி. பிரிவில் இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன்சமாஜ் கட்சியும் கூறி அரசியல் செய்து வந்தன. ஆனால், உ.பி.அரசின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் மாயாவதி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ஓபிசியில் இருந்த 17 சமூகத்தினரை எஸ்.சி. பிரிவில் சேர்த்தது என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, சட்டவிரோதம். இதற்கு முன் மாநிலத்தில் ஆட்சி செய்த சமாஜ்வாதி இந்தப் பிரிவினரை ஏமாற்றிவந்தது. அதை நாங்கள் எதிர்த்து வந்தோம்.

இந்த 17 பிரிவினரையும் எஸ்.சி. பிரிவில் சேர்த்துள்ளது மிகப்பெரிய மோசடி. ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் இந்த 17 பிரிவினரும் பெற்றார்கள். இப்போது எஸ்.சி. பிரிவில் இந்த சமூகத்தினரைக் கொண்டுவந்தபின் எஸ்.சி. பிரிவின் இட ஒதுக்கீட்டையும் பெறுவார்கள். ஏதாவது ஒரு பிரிவில் இருந்து நீக்க வேண்டும். ஆனால், இந்தப் பிரிவினரை அந்தப் பட்டியலில் இருந்து இன்னும் நீக்கவில்லை.  

கடந்த 2007-ம் ஆண்டு என்னுடைய அரசு, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசிடம் இந்த 17 பிரிவினரை எஸ்.சி. பிரிவில் சேர்க்கப் பரிந்துரைத்தேன். இதற்காக எஸ்.சி. பிரிவில் இட ஒதுக்கீடு அளவையும் அதிகரிக்க கோரிக்கை விடுத்தோம்.

ஏனென்றால், புதிதாகச் சேர்க்கப்படும் பிரிவினரால், ஏற்கெனவே இருக்கும் பிரிவினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இட ஒதுக்கீடு அளவையும் அதிகரிக்கக் கோரினோம்.  ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசும், அடுத்துவந்த பாஜக அரசும் இதைச் செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

ஆதலால், உடனடியாக உ.பி. அரசு பிறப்பித்துள்ள ஜனநாயகத்துக்கு எதிரான இந்த உத்தரவை திரும்பப் பெற்று, எஸ்.சி. பிரிவில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்து, எஸ்.சி. பிரிவினரின் நலன் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டும்''.

இவ்வாரு மாயாவதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x