Last Updated : 07 Jul, 2019 04:02 PM

 

Published : 07 Jul 2019 04:02 PM
Last Updated : 07 Jul 2019 04:02 PM

நாடுமுழுவதும் போலீஸ் துறையில் 5.28 லட்சம் காலிப் பணியிடங்கள்: தமிழகத்தில் 22 ஆயிரம், உ.பி.யில் 1.29 லட்சம்

நாடுமுழுவதும் போலீஸ் துறையில் மொத்தம் 5.28 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதில் 1.29 லட்சம் காலியிடங்கள் உத்தரப்பிரதேசத்திலும், 22 ஆயிரத்துக்ககும் அதிகமாக தமிழகத்திலும் இருக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:

அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 23 லட்சத்து 79 ஆயிரத்து 728 போலீஸ் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதில் 2018, ஜனவரி 1-ம் தேதிவரை 18 லட்சத்து 51 ஆயிரத்து 332 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 936 பணியிடங்கள் போலீஸ் துறையில் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 4 லட்சத்து 14 ஆயிரத்து 492 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. அங்கு 2 லட்சத்து 85 ஆயிரத்து 540 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன, ஒருலட்சத்து 28 ஆயிரத்து 952 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

அடுத்ததாக பிஹார் மாநிலத்துக்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 286 பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் 77ஆயிரத்து 995 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 904 பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 48 ஆயிரத்து 981 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தெலங்கானாவில் 76 ஆயிரத்து 407 பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 30 ஆயிரத்து 345 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

தமிழகத்தில் ஒருலட்சத்து 24 ஆயிரத்து 130 பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்னும் 22 ஆயிரத்து 240 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மகாராஷ்டிராவில் 26 ஆயிரத்து 195 பணியிடங்களும், மத்தியப்பிரதேசத்தில் 22 ஆயிரத்து 355 பணியிடங்களும் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் 21 ஆயிரத்து 943 காலியிடங்களும், குஜராத் மாநிலத்தில் 21 ஆயிரத்து 70 பணியிடங்களும், ஜார்கண்டில் 18 ஆயிரத்து 931 பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

இதுதவிர ராஜஸ்தானில் 18ஆயிரம், ஆந்திர பிரதேசத்தில் 17 ஆயிரத்து 933, ஹரியானாவில் 16,844, சத்தீஸ்கரில் 11,916, ஒடிசாவில் 10,322 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அசாமில் 11,452பணியிடங்களும், ஜம்மு காஷ்மீரில் 10 ஆயிரத்து 44 காலியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

ஆனால், நாகாலாந்து மாநிலத்தில் மட்டும் நிலைமை வேறுமாதிரி இருக்கிறு. அங்கு 21 ஆயிரத்து 292 போலீஸார் தேவைப்படும் நிலையில், தேவைக்கும் அதிகமாக 941 போலீஸார் இருக்கின்றன.

பணியிடங்களை நிரப்புவதில் மாநிலஅரசுகளிடையே மெத்தனம், காவலர்கள் திடீரென உயிரிழப்பு, ஓய்வு பெறுவது போன்றவற்றால் காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இவை குறித்த காலத்துக்குள் நிரப்பப்படாததால் காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x