

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான விவகாரத்தில் எந்த ஒரு அயல்நாட்டு அரசுக்கோ, அமைப்புக்கோ எந்த வித தொடர்பும் இல்லை, அவர்கள் தலையிட முடியாது, இது முழுக்க முழுக்க இந்திய அரசியல் சாசனத்தைப் பொறுத்தது ஏனெனில் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மத்திய அரசு இன்று மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதாவது அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை நீக்கம் செய்வது ஐநா கட்டுப்பாடுகளையோ, பன்னாட்டு விதிகளையோ மீறுவதாகாதா என்று உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கையில், “ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, அரசியல் சாசன சட்டம் தொடர்பானவையும் இந்திய நாடாளுமன்ற விவகாரமே. இது தொடர்பாக அயல்நாடுகளோ, அல்லது எந்த ஒரு அமைப்புமோ தலையிட உரிமையில்லை.” என்றார்.
அமித் ஷா மக்களவையில் தெரிவிக்கும் போது, “அரசியல் சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிக சட்டப்பிரிவே” என்றார்.
இந்த இரண்டு சட்டப்பிரிவுகளும் ஜம்மு காஷ்மீர் மாநில நிரந்தர குடியுரிமையை தீர்மானிக்கும் சட்டப்பிரிவுகளாகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்குவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. இதன் மூலம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.