Last Updated : 09 Jul, 2019 02:03 PM

 

Published : 09 Jul 2019 02:03 PM
Last Updated : 09 Jul 2019 02:03 PM

ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுங்கள்; சித்தராமையா வலியுறுத்தல்: மேலும் 7 பேர் விலகத் தயார்?

கர்நாடகத்தில் பெரும் அரசியல் குழப்பத்துக்கும், நிலையற்ற தன்மைக்கும் காரணமாகிய 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து, ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன. முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் பெரும்பான்மையுடன் செயல்பட்டுவந்த கூட்டணி அரசு பெரும்பான்மையின்றி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் 14 பேரும், மும்பையில் ஒரு ஓட்டலில் தங்கி அங்கிருந்து வர மறுக்கிறார்கள்.

சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டால்தான் பெங்களூரு திரும்புவோம் என்று தீர்க்கமாக இருக்கிறார்கள். ஆனால், சபாநாயகர் ரமேஷ் குமார், 14 எம்எல்ஏக்களின் கடித்ததை ஏற்றால் ஆட்சிக்கு பெரும் சிக்கல் வந்துவிடும் என்பதால், எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்.

இதற்கிடையே முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரைவத் தலைவருமான சித்தராமையா இன்று சபாநாயகர் ரமேஷ் குமாரைச் சந்தித்து பேசினார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ராஜினாமா செய்த 10 எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்துக்குப்பின் சித்தராமையா நிருபர்களிடம்  சித்தராமையா கூறுகையில் " ராஜினாமா செய்துவிட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்களும் திரும்பிவந்தால் பெரும் விளைவுகளைச் சந்திப்பார்கள். எம்எல்ஏக்கள் அனைவரும் தாமாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை. ராஜினாமாவில் நேர்மையில்லை. தற்போது நடந்துள்ள எம்எல்ஏக்கல் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களின் விஸ்வாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதில் 2 எம்எல்ஏக்கள் அனுமதியுடன் பங்கேற்கவில்லை.

மாநிலத்தில் கூட்டணி அரசை சிதைத்கும் நோக்கில், மக்கள் தேர்வு செய்த ஆட்சியை குலைக்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது. மற்ற மாநிலங்களிலும் இதுபோன்றுதான் பாஜக நடந்து கொண்டது.

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில்இருந்து அதை சீர்குலைக்கும் நோக்கிலேயே பாஜக முயற்சிகளை செய்து வருகிறது. இது 6-வது முறையாக பாஜக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறது. ராஜினாமா செய்த எம்எல்ஏக்கல் 10 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பையில் ஒரு சொகுசு ஓட்டலில் தங்கி இருந்த 14 எம்எல்ஏக்களும் கோவாவுக்கு நேற்று மாலை புறப்பட இருப்பதாக இருந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் சொகுசு பேருந்து ஒன்றில் புனே நகரில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள சதாரா எனும் இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டால்தான் அந்த 14 எம்எல்ஏக்களும் பெங்களூருதிரும்புவதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடயே மேலும் 7 எம்எல்ஏக்கள் பெங்களூருவில் இருந்து மும்பைக்கு வரத் தயாராக இருப்பதாகவும், இவர்கள் இன்று இரவுக்குள் வந்துவிடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x