

2ஜி வழக்கில் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக பிறப்பித்த கைது ஆணையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உடனடியாக ரத்து செய்தது.
முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீது தொடரப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இறுதிவாதம் டிசம்பர் 19-ம் தேதி தொடங்கும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை உரிமங்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டது என சிபிஐ குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உட்பட 14 பேர் மற்றும் 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு நடைபெற்று வருகிறது.
4,400 பக்க வாக்குமூலங்கள்
சிபிஐ தரப்பில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, அரசியல் தரகர் நீரா ராடியா உட்பட 153 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 4,400 பக்கங்களில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப் பட்டுள்ளனர்.
நீதிபதி உத்தரவு
இவ்வழக்கின் இறுதி வாதம் நேற்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நீதிபதி ஓ.பி.சைனி முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘தனது வாதத்தைத் தொடங்க சிறிது அவகாசம் வேண்டும்’ எனக் கோரினார். இதைத் தொடர்ந்து நீதிபதி சைனி “இறுதி வாதம் வரும் டிசம்பர் 19-ம் தேதி தொடங்கும்” என உத்தர விட்டார்.
முன்னதாக, குற்றம்சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் சாகித் பல்வாவின் வழக்கறிஞர், “மேலும் சில சாட்சிகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் இறுதி வாதத்தை எப்படி அனுமதிக்க முடியும்” எனக் கேள்வியெழுப்பினார்.
மன்னிப்பு கோரிய வழக்கறிஞர்
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது திமுக எம்.பி. கனிமொழியோ, அவரது வழக்கறிஞரோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, கனிமொழிக்கு எதிராக பிணையில் வரமுடியாத கைது ஆணையை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி பிறப்பித்தார்.
“தற்போது 11.30 மணியாகிறது. கனிமொழி சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அல்லது கனிமொழி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி எந்த மனுவும் சமர்ப்பிக்கப்படவில்லை” எனக் கூறி கனிமொழிக்கு எதிராக பிணையில் வரமுடியாத கைது ஆணையை நீதிபதி பிறப்பித்தார்.
ஆனால், 12.25 மணிக்கு ஆஜரான கனிமொழி தரப்பு வழக்கறிஞர், மன்னிப்புக் கோரினார்.
இதைத்தொடர்ந்து, கைது ஆணையை ரத்து செய்த நீதிபதி, “வருங்காலத்தில் கனிமொழி தரப்பு வழக்கறிஞர் கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்தார்.
முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அவரது அப்போதைய தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.