கொல்கத்தா பண்பாட்டில் ‘ஜெய்ஸ்ரீராம்’ கிடையாது: அமர்த்தியா சென்

கொல்கத்தா பண்பாட்டில் ‘ஜெய்ஸ்ரீராம்’ கிடையாது: அமர்த்தியா சென்
Updated on
1 min read

ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் சமீபத்திய வரவு, கொல்கத்தா, மேற்கு வங்க பண்பாடுகளில் இதற்கு முன்பு இருக்கவில்லை என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

‘என் நாட்களில்’ இந்த கோஷத்திற்கு எந்த ஒரு பொருளும் இருந்ததில்லை. இது சமீபத்திய கண்டுபிடிப்பு, மக்களைத் தாக்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது’ என்கிறார் அமர்த்தியா சென்.

ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரிக்‌ஷா இழுக்கும் ஒருவரிடம் ஜெய் ஸ்ரீராம் சொல் என்று கூறி அவரை தடியால் தாக்கும் போது தான் நான் இது குறித்து எச்சரிக்கையடைந்தேன், என்றார் அமர்த்தியா.

2019 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மோடி 2.0 அரியணை ஏறிய பிறகு இதுவரை சுமார் 12 வழக்குகள் இது தொடர்பாக எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புதன் கிழமையன்று 11 வயது பையன் ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கப்பட்ட சம்பவமும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

“நாம் சாதி மத ரீதியாக பாகுபாடுகளை விரும்புவதில்லை, ஆனாலும் இது அதிகரித்து வருகிறது. இந்த நாட்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர் எனும்போது என்னுடைய பெருமைக்குரிய நகரத்தில் இது நடக்கிறது எனும்போது நாம் கேள்விகள் கேட்க வேண்டிய தேவை உள்ளது.

‘பிரிதாளும் அரசியல்’

மேலும் இந்தப் பல்கலைக் கழக நிகழ்ச்சியின் கேள்வி பதில் உரையாடலின் போது சென் கூறும்போது, “பெங்கால் மக்களுக்கு ஜெய் ஸ்ரீராம், ராம் நவமி போன்றவை அவ்வளவாக பரிச்சயமில்லாதது, ஆனால் இந்தப் புதிய பண்பாடு இறக்குமதி செய்யப்படுகிறது, பிரிதாளும் அரசியல் செய்வதற்காகவே, இந்து மகாசபை இத்தகைய தன்மையை ஒரு முறை ஏற்கெனவே செய்தது. அதே காரணத்துக்காகத்தான் தற்போது ஜெய் ஸ்ரீராம் என்பது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஆனால் பாஜக தலைவர் திலிப் கோஷ், “அமர்த்தியா சென் போன்ற அறிவுஜீவிகள் கூறுவதை யாரும் பொருட்படுத்தக் கூட இல்லை, எங்கு பார்த்தாலும் மக்கள் தங்கள் இருகைகளையும் உயர்த்தி ஜெய் ஸ்ரீராம் என்று கூறுகின்றனர், கம்யூனிஸ்ட்கள் முடிந்து விட்டனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in