

அமர்நாத் குகைக் கோயிலுக்கு வருபவர்களை தான் வரவேற்பதாகவும் அதேநேரம் புனித யாத்திரை காரணமாக உள்ளூர்வாசிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தேவையற்றது. அவை நீக்கப்பட வேண்டும் என்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத் தலைவர் ஷா ஃபாயிசல் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், அரசியல் தலைவருமான ஷா ஃபாயிசல் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தல்களின் போது பொதுமக்கள் போக்குவரத்துக்காக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இப்போது மீண்டும் அமர்நாத் யாத்திரைக்காக இந்த நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
யாத்திரையின்போது உள்ளூர்வாசிகளின் நடமாட்டத்தை நிறுத்துவதற்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டவர்கள், இதற்கெல்லாம் பதில் சொல்லும் நாள் ஒன்று வரும் என்பதையும் அதாவது அவர்களின் நாட்களும் கணக்கிடப்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
சிவபெருமான் தரிசனத்திற்கு வருபவர்களை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர வேண்டும்.''
இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் ஷா ஃபாயிசல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் உள்ள காசிகுண்ட் நகரத்திலிருநது ஜம்மு ரயில்வே கோட்டத்தில் உள்ள பானிஹால் நகரத்திற்குச் செல்லும் ரயில் சேவையை அமர்நாத் யாத்திரைக் காலம் முடிவடையும்வரை அதாவது வரும் ஆகஸ்ட் 15 வரை காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கும் ஷா ஃபாயிசல் கண்டனம் தெரிவித்துள்ளார்.