சாமானியர்களின் குரல்களுக்கோ, அறிவார்த்த பொருளாதாரவாதிகளின் குரல்களுக்கோ செவிமடுக்காத ஒரு பட்ஜெட்:  ப.சிதம்பரம், காங்கிரஸ் விமர்சனம்

சாமானியர்களின் குரல்களுக்கோ, அறிவார்த்த பொருளாதாரவாதிகளின் குரல்களுக்கோ செவிமடுக்காத ஒரு பட்ஜெட்:  ப.சிதம்பரம், காங்கிரஸ் விமர்சனம்
Updated on
1 min read

மத்திய நிதியமைச்சர் வெள்ளியன்று அளித்த மத்திய பட்ஜெட் சுவையும் சுவாரசியமுமற்ற பலவீனமான பட்ஜெட், ‘பழைய பாட்டிலில் புதிய வைன்’ ரகம் என்று ப.சிதம்பரமும் பிற காங்கிரஸ் தலைவர்களும் விமர்சனம் செய்துள்ளனர்.

சமுதாயத்தின் எந்த ஒரு பிரிவுக்கும் எந்த ஒரு நிவாரணத்தையும் அளிக்காத ஒரு பட்ஜெட் என்றும்,  சாமானியர்களின் குரல்களுக்கோ, அறிவார்த்த பொருளாதாரவாதிகளின் குரல்களுக்கோ செவிமடுக்காத ஒரு பட்ஜெட் என்றும் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

இந்த பட்ஜெட்டை ‘சுவையற்றது’ என்று விமர்சித்த ப.சிதம்பரம் பரவலான எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்து விட்டது என்றார்.

“மோடியின் அரசு இந்தியாவையே ஏதோ ஒரு பெரிய மாநில அரசாகக் கருதுகிறது. எனவேதான் மாநில அரசுகளின் உரிமையையும், கடமைகளையும் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் அல்ல, மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிக்கும் சமமற்ற கூட்டுறவாகும்” என்றார் ப.சிதம்பரம்

பட்ஜெட்டை விமர்சித்த இன்னொரு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி  ‘பழைய வாக்குறுதிகளின் மறுக்கூற்றுகள்’ என்றார்.

“அவர்கள் புது இந்தியா என்கின்றனர், ஆனால் பட்ஜெட் என்னவோ புதிய பாட்டிலில் பழைய வைன் கதைதான்” என்றார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. அவர் மேலும் கூறும்போது, இந்தியாவை ஏதோ ‘எல் டொராடோ’ (அனைவருக்குமான செல்வ வளம்) ஆக சித்தரிக்க முயல்கிறது பிரதமர் மோடி அரசு. ஆனால் நிஜத்தில் பொருளாதாரத்தின் வலியையே அனுபவித்து வருகிறோம்.

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான திட்டம் எதுவும் இல்லை. வேளாண் துறைக்கான தனித்துவமான எந்த ஒரு திட்டமும் இல்லை. தொழிலாளர் துறையிலும் இதே நிலைதான்.  பழைய வாக்குறுதிகளின் மறு ஒலிபரப்பாக உள்ளது” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரஞ்சி?” த் சுர்ஜேவாலா  “மந்தமான, எந்த வகையிலும் சேர்க்கவியலாத, உத்வேகமற்ற, திசையற்ற ஒரு பட்ஜெட். பொருளாதார மீட்டெழுச்சியில் ஜீரோ,  ஊரக வளர்ச்சியில் ஜீரோ, வேலைவாய்ப்பில் ஜீரோ, நகர்ப்புற மறுவளர்ச்சியில் ஜீரோ, மிகவும் சாதாரணமான பட்ஜெட் எப்படி புது இந்தியாவை நோக்கியதாகும்?” என்று சாடினார்.

அவர் மேலும் தொடர் ட்வீட்களில் தெரிவிக்கும் போது, “நிதியமைச்சர் நிதிப்பற்றாக்குறை 3.3% என்கிறார், ஆனால் உண்மை என்னவோ வேறு.  ஊரக வளர்ச்சி செலவினம், உள்கட்டமைப்புச் செலவினம், உணவு மானியச் செலவினம் ஆகியவை நிதிப்பற்றாக்குறையின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்படவில்லை. உண்மையான நிதிப்பற்றாக்குறை 4.7%” என்றார்.

அவர் மேலும் விமர்சிக்கும் போது கார்ப்பரேட்களுக்கு சலுகை, நேர்மையான வரி செலுத்துவோருக்கு ஒரு ரிலீஃபும் இல்லை, என்று சாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in