Published : 10 Jul 2019 05:09 PM
Last Updated : 10 Jul 2019 05:09 PM

ரயில் பயணிளுக்கு வசதி; அக்டோபர் முதல் நாள்தோறும் கூடுதலாக 4 லட்சம் படுக்கைகள்: புதிய தொழில்நுட்பம் அமல்

வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து ரயில்வேயில் 4 லட்சம் படுக்கைகள் கூடுதலாக  நாள்தோறும் பயணிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ரயில்களின் கடைசியில் இணைக்கப்பட்டு இருக்கும் "பவர்-ஜெனரேஷன்" பெட்டி, நீக்கப்பட்டு, அந்த பெட்டிகள் அனைத்தும் படுக்கைகளாக மாற்றப்பட உள்ளன. இதற்கான புதிய தொழிலநுட்பத்தை ரயில்வே துறை பயன்படுத்த உள்ளது

தற்போது நீண்டதொலைவு செல்லும் எக்ஸ்பிரஸ், அதிவிரைவு, சதாப்தி ரயில்களில் கடைசியில் பவர்-ஜெனரேட்டர் பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ஜெனரேட்டர் இயக்கத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரம் பயணிகள் பெட்டிகளில் மின்விசிறி, விளக்குகள், ஏசி ஆகியவற்றை இயக்க பயன்படுகிறது. ரயில் இஞ்சின் செல்வதற்காக மட்டும் மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்திய ரயில்வே தற்போது இந்த முறையை மாற்றி புதிய தொழில்நுட்பத்தை புகுத்த இருக்கிறது. இதற்கு "ஹெட் ஆன் ஜெனரேஷன்"(ஹெச்ஓஜி) என்று பெயர். இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே உலகளவில் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. இப்போதுதான் இந்திய ரயில்வே இங்கு பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.

இந்த "ஹெட் ஆன் ஜெனரேஷன்" தொழில்நுட்பத்தின் மூலம் ரயில் எஞ்சின் மட்டுமல்லாது, ரயில் பெட்டிகளில் உள்ள அனைத்து பயன்பாட்டுக்கும் மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்சாரம் மூலம் எடுத்துக்கொள்ள முடியும்.

தற்போது ரயில்வேயில் பயன்படுத்தப்பட்டுவரும் தொழில்நுட்பத்தின் மூலம் ரயில் எஞ்சினுக்கு மட்டுமே மின்கம்பியில் இருந்து மின்சாரம் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கு "பான்டோகிராஃப்" என்று பெயர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எஞ்சின்களை மட்டுமே இயக்க முடியும்.

இந்நிலையில், புதிய ஹெட் ஆன் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தை ரயில்வே பயன்படுத்த தொடங்கிவிட்டால், மின்கம்பியில் இருந்து எஞ்சின் இயக்கத்துக்கும், பயணிகள் பெட்டிகளின் பயன்பாட்டுக்கும் மின்சாரம் எடுக்க முடியும்.

இதன் மூலம் தற்போது புழக்கத்தில் இருக்கும் 5 ஆயிரத்துக்கும் மேலான ஜெனரேட்டர் கோச்சுகள் சீரமைக்கப்பட்டு படுக்கைகள் கொண்ட பெட்டிகளாக மாற்றப்படும் .

இதன் மூலம் பயணிகளுக்கு நாள்தோறும் கூடுதலாக 4 லட்சம் படுக்கைகள் கிடைக்கும். இந்த பெட்டிகள் அனைத்தும் பயணிகள் படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றப்படும் போது அரசுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவு குறையும்.

இதுகுறித்து ரயில்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்  " தற்போது ரயில்பெட்டிகளுக்கு பின்னால் இணைக்கப்படும் ஜெனரேட்டர் பெட்டி இனி படிப்படியாக நீக்கப்படும். அதற்கு பதிலாக "ஹெட் ஆன் ஜெனரேஷன்" முறை செயல்படுத்தப்பட உள்ளது.

 இந்த ஜெனரேட்டர்களை இயக்க மணிக்கு 40 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது, ஏசி பெட்டிகளுக்கு 70 லிட்டர் வரை மணிக்கு தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலுக்கு 3 யூனிட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மணிக்கு 120 யூனிட் மட்டுமேஉற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஏராளமான செலவாகிறது.

ஆனால்,  புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவருவதன் மூலம் டீசலுக்கான செலவு நிறுத்தப்படும். மின்கம்பத்தில் இருந்தே அனைத்து பெட்டிகளுக்கும் மின்சாரம் எடுத்துக்கொள்ள முடியும்.

இந்தமுறையால் சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதமான கேடும் வராது. சத்தம் இருக்காது, கரியமிலவாயு வெளியேறாது. இந்த முறையால் 5 ஆயிரத்தும் மேலான ஜெனரேட்டர் பெட்டிகள் சீரமைக்கப்பட்டு பயணிகளுக்கு பயன்படும் வகையில் படுக்கைகள் அமைக்கப்படும். நாள்தோறும் 4 லட்சம் படுக்கைகள் கூடுதலாகக் கிடக்கும் " எனத் தெரிவத்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x