

அரசு ஒப்பந்தத்தில் ஊழல் தொடர்பாக அருணாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகியின் சகோதரர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச முதல்வராக இருந்தவர் நபம் துகி. பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பையும் இவரே வகித்து வந்தார்.
இவரது ஆட்சிக் காலத்தில் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு தனது குடும்பத்தினருக்கு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கினார் என்று புகார் எழுந்தது. இவரது சகோதரர் நபம் ஹரி, மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது தெரிந்தது.
இந்த ஒப்பந்தத்தை பெற்ற முன்னாள் முதல்வரின் சகோதரரும் அவரது மனைவியும் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கவுகாத்தி உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் இதுதொடர்பாக சிபிஐ விசாரித்து வந்தது. இதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரின் சகோதரர் நபம் ஹரி, அவரது மனைவி ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.