Last Updated : 30 Jun, 2019 11:35 AM

 

Published : 30 Jun 2019 11:35 AM
Last Updated : 30 Jun 2019 11:35 AM

ராகுல் தலைவராக நீடிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியிலிருந்து இதுவரை 200 தலைவர்கள் ராஜினாமா

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகக் கூடாது என வலியுறுத்தி மாநிலத் தலைவர்கள், தேசிய அளவிலான பொறுப்பாளர்கள் என இதுவரை 200 தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் வென்று, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பேற்று கடந்த மாதம் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.

ஆனால் ராகுல் காந்தி பிடிவாதமாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று உறுதியாக இருக்கிறார். ஆனால், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும், அவர் தனது முடிவை மாற்றாமல் இருநது வருகிறார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் நீட்டிக்க கோரி பல்வேறு மாநிலத் தலைவர்கள், தேசிய அளவில் பொறுப்புகளில் இருக்கும்தலைவர்கள் கூட்டம் கூட்டமாக ராஜினாமா செய்து வருகின்றனர். 

அந்த வகையில், சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிஎல். பூனியா, விவசாயிகள் சங்கத் தலைவர் நானா படோல் ஆகியோரும் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இதுவரை காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்த 36 பேர் பதவி விலகியுள்ளனர்.

மேலும், காங்கிரஸ் தலைவர்கள் தீபக் சிங், உத்தரப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ரஞ்சித் சிங் ஜுதேவ், பொதுச்செயலாளர் ஆராதனா மிஸ்ரா மோனா, துணைத் தலைவர் திரிபாதி உள்ளிட்ட பலர் நேற்று ராஜினாமா செய்ததாக காங்கிரஸ் கட்சிஅறிவித்தது.

காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் 17 மாநிலங்களில் ஒரு இடத்தைக்கூட கைப்பற்ற முடியவில்லை என்பதால், அந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருப்போரும் ராஜினாமா செய்து வருகிறார்கள்.

ராகுல் காந்தி தலைவர் பதவியை விட்டுச் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி, மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தீபக் பபாரியா, கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர், டெல்லி காங்கிரஸின் செயல்தலைவர் ராஜேஷ் லிலோதியா, தெலங்கானா செயல்தலைவர் பொன்னம் பிரபாகர் உள்ளிடட 140 பேர் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், " காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொருவரின் வேண்டுகோளும், விருப்பமும் ராகுல் காந்தி தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்பதுதான். காங்கிரஸ் செயற்குழுவும் வலியுறுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவும் இதை வலியுறுத்தியுள்ளன" எனத்  தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், " இந்த பிரச்சினை நீண்டகாலத்துக்கு தொடர்ந்து வருகிறது. முதலில் கட்சியின் தலைவராக யாரேனும் பொறுப்பேற்று, தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யவ வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் நாம் ஒவ்வொருவிதமான காரணங்களால் தோல்வி அடைந்துள்ளோம். தொடர்ந்து தலைவர் பதவிக்குரிய விஷயத்தில் முடிவு எடுக்காமல் தள்ளிப்போட்டால் நாம் இன்னும் இழக்கவேண்டியது இருக்கும்" எனத் தெரிவி்த்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x