70 சதவீத சிறுபான்மை மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் உணவுக் கூடம் கட்டுவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா உத்தரவு: பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

70 சதவீத சிறுபான்மை மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் உணவுக் கூடம் கட்டுவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா உத்தரவு: பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

எழுபது சதவீதத்துக்கும் அதிகமாக சிறுபான்மை மாணவர்கள் பயிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உணவு அரங்குகள் கட்டுவதற்கு மேற்கு வங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளன.

70 சதவீதத்துக்கும் அதிகமாக முஸ்லிம் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட வசதியாக இருக்கைகள் உள்ள உணவுக் கூடங்கள் அமைக்கும் உத்தரவை மேற்கு வங்க அரசு அண்மையில் பிறப்பித்துள்ளது.

இதற்கு அந்த மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் இதுகுறித்து கூறும்போது, “சிறுபான்மை மாணவர்கள் அதிகமாக பயிலும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் உணவுக் கூடங்கள் அமைத்து மத மோதலை உருவாக்கப் பார்க்கிறது மேற்கு வங்க அரசு. இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். மத அடிப்படையில் மாணவர்களிடையே பாகுபாட்டை உருவாக்க முயற்சிக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. இதன்பின்னால் ஏதாவது சதித்திட்டம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் இதற்கு திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் கியாசுதீன் மோல்லா கூறும்போது, “சிறுபான்மை மாணவர்கள் அதிகமாக பயிலும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். அதற்காகத்தான் இந்த உணவுக் கூடங்கள் அமைக்கும் திட்டத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அதிக பயன் கிடைக்கும். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை” என்றார்.

பாஜகவைப் போலவே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in