

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் இருந்து அத்தி வரதர் நேற்று அதிகாலை 3 மணி அள வில் வெளியில் எடுக்கப்பட்டார். ஜூலை 1 முதல் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ள நிலையில், இந்த விழா நடைபெறும் 48 நாட்களுக்கும் சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனக் கோலத்தில் இருந்தார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து 48 நாட்களுக்கு பக்தர்களுக்குக் காட்சி அளிப்பது வழக்கம். கடந்த 1979-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி அத்திவரதர் கோயில் வசந்த மண்டபத்தில் பக்தர் களுக்கு காட்சி அளித்தார். 40 ஆண்டு களுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17-ம் தேதிவரை காட்சி அளிக்க உள்ளார்.
இதற்காக அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் நேற்று அதி காலை 3 மணி அளவில் முக்கிய பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் வெளியே எடுக்கப்பட்டார். முதலில் அவரை வாகன மண்டபத்துக்கு கொண்டு சென்றதும் அங்கு சில பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் வசந்த மண்டபத்தில் புதிய வஸ்திரம் சாற்றி, சயனகோலத்தில் வைத்துள்ளனர். அந்தப் பகுதியில் யாரும் செல்லாதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் வருகையைச் சமாளிக்க நிரந்தர மேற்கூரை அமைத்தல், பந்தல் அமைத் தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இந்த அத்திவரதர் விழாவை முன் னிட்டு மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் விழா தொடங்குவது முன்னிட்டு ஜூலை 1-ம் தேதி காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுக்கு இடையூறு இல்லா மல்) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படு கிறது. இந்த விடுமுறைக்கு பதில் ஏதேனும் ஒரு சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படும் என்றார்.
இந்த விழாவை முன்னிட்டு ஜூலை 1-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 17 வரை காலை 11 மணியில் இருந்து 12.50 வரை 10 மற்றும் 15 நிமிட இடைவெளிகளில் 12 சிறப்பு ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு பகுதிக்கு இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப் பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரி களுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த ரயில்களை இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.