பசுக்குண்டர்களால் கொல்லப்பட்ட விவசாயி பெலு கான் மீது 2 ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிக்கை

பசுக்குண்டர்களால் கொல்லப்பட்ட விவசாயி பெலு கான் மீது 2 ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிக்கை
Updated on
1 min read

கால்நடை விவசாயியும் பசுக்குண்டர்களால் கொல்லப்பட்டதாக கடும் புகார்கள் எழுந்த நபருமான ராஜஸ்தானைச் சேர்ந்த பெலு கான் மற்றும் அவரது 2 மகன்கள் மீது பெலுகான் மரணமடைந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு பசுக்களைக் கடத்தியதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலன் அல்வார் மாவட்டத்தில் பெலுகான் என்பவர் பசுக்குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக கடும் புகார்கள் எழுந்தன.  இவர் ஹரியாணாவில் தன் சொந்த கிராமத்துக்கு பசுக்களை கொண்டு சென்ற போது பசுக்களை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்ட கும்பல் ஒன்று அடித்துக் கொன்றதாக வழக்கு எழுந்தது.

இந்நிலையில் அவர் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து ராஜஸ்தான் போலீஸ் பல்வேறு பிரிவுகளின் கீழ் பெலுகான் மற்றும் அவரது 2 மகன்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

மே 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிக்கையில் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகள் 5, 8, 9 -ன் கீழ் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற கால்நடைத் திருவிழாவில் பசுக்களை வாங்கிய கான் ஏப்ரல் 1, 2017 அன்று அவற்றை ஹரியாணாவில் உள்ள தன் சொந்த ஊரான நூவுக்கு எடுத்துச் சென்றார்.

ட்ரக்கில் சென்று கொண்டிருந்த போது ஜெய்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் பெஹ்ரூர் அருகே பசுக்குண்டர்கள் லாரியை மடக்கினர். பசுக்களைக் கடத்துவதாகக் கூறி பெலுகானை கடுமையான ஆயுதங்களினால் தாக்கினர். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெலு கான் 2 நாட்கள் சென்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in