Published : 29 Jun 2019 02:54 PM
Last Updated : 29 Jun 2019 02:54 PM

நீரவ் மோடியை விடவும் பெரிய வங்கி மோசடி; ரூ.14,500 கோடி மோசடி செய்த சந்தேசரா சொத்துக்கள் முடக்கம்

குஜராத்தை சேர்ந்த சந்தேசரா சகோதரர்கள் செய்த மோசடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடியை விட அதிகம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த, நிறுவனம் ஸ்டெர்லிங் பயோடெக் சந்தேசரா. இந்த நிறுவனத்தி்ன் உரிமையாளர்கள் நிதின் சந்தேசரா, சேதன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா ஆகியோர், 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய வங்கிகளில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தேசரா குழும நிறுவனங்கள் கடன் வாங்கியுள்ளன. ஆந்திரா வங்கி, யுகோ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றில் கடன் பெற்றுள்ளனர்.

வங்கிகளில் வாங்கிய கடனை தொழில்சாராத பணிகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களில் முதலீடு செய்ததும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் சொத்துக்களை முடக்க அமலக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து அமலாக்கதுறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி செய்த 11,400 கோடியை விட சந்தேசரா நிறுவனங்கள் பெரும் மோசடி செய்துள்ளன.

அந்த நிறுவனங்கள் செய்துள்ள வங்கி மோசடியின் மொத்த அளவு 14,500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியாவில் செய்யும் எண்ணெய் தொழிலில் கடனை சட்டவிரோதமாக மாற்றியதுடன், சொந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தியுள்ளனர். அவர்களது சொத்துக்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்.

அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 9778 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிறுவத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கட்டடங்கள் மட்டுமின்றி எண்ணெய் துரப்பன மேடை, கப்பல்கள் என பல வகை சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவித்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x