

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று பலத்த மழை பெய்ததுநீண்டநாட்களாக கோடை வெயிலின் கொடுமையை அனுபவித்து வந்த மும்பை மக்கள், இந்த மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடப்பாண்டில் வழக்கத்தை காட்டிலும் கோடை வெப்பம் மிக அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
கோடைக்காலம் முடிவடைந்தும் கூட, வெயிலின் உக்கிரம் குறையாததால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, மும்பையில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. மேலும், தென்மேற்கு பருவமழையும் தாமதமானதால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இருந்தபோதிலும், போதிய அளவு மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், மும்பையில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை தொடங்கிய மழை, மாலை வரை நீடித்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பல்வேறு முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.