Last Updated : 31 Aug, 2017 08:41 AM

 

Published : 31 Aug 2017 08:41 AM
Last Updated : 31 Aug 2017 08:41 AM

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகள் நான்தான்: பெங்களூரு பெண், பிரதமருக்கு கடிதம் எழுதியதால் பரபரப்பு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள பனசங்கரியை சேர்ந்த அம்ருதா (38) அண்மையில், ‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனது சொந்த தாய்’ என கன்னட ஊடகங்களில் பேட்டி அளித்தார். ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் எனது தாய். நான் பிறந்த பிறகு என்னை தனது சகோதரி சைலஜாவிடம், ஜெயலலிதா ஒப்படைத்தார். பெங்களூருவில் இருந்த சைலஜா - சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர். கடந்த 1996-ம் ஆண்டு சைலஜா ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். அதனை எடுத்துக்கொண்டு போயஸ் கார்டனுக்கு சென்றேன். என்னை பார்த்ததும் ஜெயலலிதா, மிகவும் பாசத்தோடு நடந்துகொண்டார்.

அப்போது என்னிடம் ஜெயலலிதா, ‘எக்காரணம் கொண்டும் அரசியலுக்கும், திரையுலகிற்கும் வரக் கூடாது. எனது மகள் என யாரிடமும் சொல்லக் கூடாது. பெங்களூருவிலேயே இருக்க வேண்டும்’ என உறுதியாக கூறினார். என்னை வளர்த்த தாய் சைலஜாவும் அண்மையில் காலமானார். அடுத்த சில மாதங்களில் ஜெயலலிதாவும் காலமானார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பலமுறை சந்திக்க சென்றேன். சசிகலா குடும்பத்தினர் என்னை அனுமதிக்கவில்லை. எனக்கு கிடைத்த தகவல்படி, ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டதாலே இறந்தார்.

இது தொடர்பாக சசிகலா, இளவரசி, டிடிவி தினகரன், தீபக் ஜெயகுமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

நான் பிறந்தபோது லலிதா, ரஞ்சினி உள்ளிட்டோர் ஜெயலலிதாவை தங்களது வீட்டில் தங்கவைத்து பராமரித்துள்ளனர். நான் ஜெயலலிதாவின் மகள் என்பதில் சந்தேகம் இருந்தால் அவரது உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x