Published : 09 Aug 2017 04:32 PM
Last Updated : 09 Aug 2017 04:32 PM

’இருண்ட சக்திகளினால்’ ஆபத்தான நிலையில் மதச்சார்பின்மை, பேச்சுரிமை: சோனியா தாக்கு

மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தின் மீது வெறுப்பாலும் பிரிவினையாலும் ஆன மேகங்கள் சூழ முயற்சிக்கின்றன என்று சோனியா காந்தி பாஜக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு அனுசரிக்கப்பட்டது, இதில் பல உறுப்பினர்களும் உரையாற்றினர்.

அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ''மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தின் மீது வெறுப்பாலும் பிரிவினையாலும் ஆன மேகங்கள் சூழ முயற்சிக்கின்றன. குறுகிய மனப்பான்மையும், மதவாதக் கொள்கையும் கொண்ட நாடாக இந்தியா மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று மதச்சார்பின்மையும், பேச்சுரிமையும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. அந்த சுதந்திரத்தை நாம் காப்பாற்ற வேண்டுமானால், அவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.

குறுகிய மனப்பான்மை கொண்ட குழுக்களை நம்மால் நிச்சயம் அனுமதிக்க முடியாது. அனைவராலும் நேசிக்கப்படுகிற, சுதந்திர போராட்டத் தியாகிகளால் உருவாக்கப்பட்ட, தாங்கள் நம்புகிற இந்தியாவுக்காக மக்கள் போராட வேண்டும்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்த, நாட்டின் சுதந்திரத்துக்காக எந்தவொரு பங்களிப்பையுமே அளிக்காத மக்களும், அமைப்புகளும் இருந்திருக்கின்றன என்பதை மக்கள் நிச்சயம் மறக்கக் கூடாது'' என்றார்.

சோனியா காந்தி எந்த ஒரு கட்சியின் பெயரையோ, தலைவரையோ குறிப்பிடாவிட்டாலும், பாஜகவை கொள்கைரீதியாக வளர்த்தெடுத்த ஆர் எஸ்எஸ்இயக்கத்தை அவர் சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x