Last Updated : 13 Aug, 2017 11:51 AM

 

Published : 13 Aug 2017 11:51 AM
Last Updated : 13 Aug 2017 11:51 AM

சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் முயற்சி: காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

காஷ்மீரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 35-ஏ பிரிவை அபகரிக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் இந்தியப் படைகளால் காஷ்மீர் மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதாகவும் கூறி பிரிவினைவாத தலைவர்கள் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்தப் போராட்டத்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடியிருந்தன. பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயங்கவில்லை. ஸ்ரீநகரில் 5 காவல் நிலையப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அரசியல் சட்டத்தின் 35 ஏ மற்றும் 370-வது பிரிவுகள் காஷ்மீருக்கு சிறப்பு சுயாட்சி அந்தஸ்தை அளிக்கின்றன. இதன் மூலம் பிற மாநில மக்கள் அங்கு சொத்துகள் வாங்கவும் அரசு வேலைவாய்ப்பு பெறவும் தேர்தலில் போட்டியிடவும் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் காரணமாக பிற மாநில மக்களை ஜம்மு காஷ்மீர் அரசு பாரபட்சமாக நடத்துவதாகவும் இவற்றை ரத்து செய்யக் கோரியும் ஒரு தன்னார்வ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதை மாற்றும் முயற்சி நடைபெறுவதாக பிரிவினைவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x