Last Updated : 13 Aug, 2017 12:12 PM

 

Published : 13 Aug 2017 12:12 PM
Last Updated : 13 Aug 2017 12:12 PM

எடியூரப்பா தலைமையில் பேரவைத் தேர்தலில் வென்று கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடிக்கும்: பெங்களூருவில் அமித் ஷா நம்பிக்கை

மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பெங்களூருவில் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷா நேற்று காலை பெங்களூரு வந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடா, சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது:

பாஜகவை பலப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதற்காக வந்திருக்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா வளர்ச்சி பெறவில்லை. ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் வரை பாஜக தொண்டர்கள் ஒரு நிமிடம் கூட ஓயக்கூடாது.

எடியூரப்பா தலைமையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி பயணத்தில் விரைவில் கர்நாடகாவும் இணையும். அதுவரை பாஜக தலைவர்கள் ஓயாமல் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்த அமித் ஷா புதிதாக அமைக்கப்பட்டிருந்த நூலகத்தை திறந்து வைத்தார். மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான இணையதள பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார். இதையடுத்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். மேலும் பாஜக எம்பி, எம்எல்ஏக்களுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது உள்கட்சி மோதலை விட்டு, அனைவரும் கட்சி பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டதாக தெரிகிறது.

மாலை 6 மணிக்கு தனியார் விடுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோருடன் கலந்துரையாடினார். அப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு தேவையான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாளை வரை இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித் ஷா, பல்வேறு மடாதிபதிகளையும், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி வகுப்புகளின் தலைவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x