Last Updated : 14 Aug, 2017 05:03 PM

 

Published : 14 Aug 2017 05:03 PM
Last Updated : 14 Aug 2017 05:03 PM

ஷரத் யாதவ் விசுவாசிகளான 21 தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்: ஐக்கிய ஜனதாதளம் அதிரடி

பாஜக-வுடன் இணைந்த நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்த ஷரத் யாதவ்வுக்கு விசுவாசமானவர்கள் என்று கருதப்படும் 21 தலைவர்களை ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி பிஹார் ஐக்கிய ஜனதாதளக் கட்சித் தலைவர் பாசிஸ்தா நாராயண் சிங் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த 21 பேரில் முன்னாள் அமைச்சர் ரமாய் ராம், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர் சின்ஹா, முன்னாள் எம்.பி. அர்ஜுன் ராய், முன்னாள் எம்.எல்.சி. விஜய் வர்மா, ஆகிய தலைவர்களும் அடங்குவர்.

தவிரவும், பல மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ரமாய் ராய், அர்ஜுன் ராய் ஆகியோர் நீக்கப்பட்ட தலைவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

பிஹாரின் 11 கோடி மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக பாஜகவுடன் கைகோர்த்து நிதிஷ் துரோகம் செய்து விட்டார் என்று ஷரத் யாதவ் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.

சோனியா ஏற்பாடு செய்த எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜ்ய சபா எம்.பி. அலி அன்வரை ஏற்கெனவே ஐக்கிய ஜனதாதளம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷரத் யாதவின் நிலை கட்சியில் என்னவென்பது ஆகஸ்ட் 19-ம் தேதி நிதிஷ் குமார் தலைமையில் நடைபெறும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x