Last Updated : 18 Aug, 2017 10:26 AM

 

Published : 18 Aug 2017 10:26 AM
Last Updated : 18 Aug 2017 10:26 AM

பெங்களூருவில் பொங்கும் ஏரியால் சுற்றுச்சுழல் பாதிப்பு: காற்றில் நுரை பறப்பதால் பொதுமக்கள் அவதி

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் ஏரியில் ரசாயனக் கழிவு நீர் கலப்பதால் மலைபோல நுரை பொங்கி, காற்றில் பறப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெங்களூருவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெல்லந்தூர், வர்தூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதேபோல சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தும் வெளியேறிய கழிவு நீரும் ஏரியில் கலந்தது. இதனால் ஏரி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, பெல்லந்தூர், வர்தூர் ஏரிகள் நுரையாக பொங்கின.

இதில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள பெல்லந்தூர் ஏரி அதிகமாக பொங்கியதால், ஏரி நீர் முழுவதும் நுரையால் மூடப்பட்டது. மேலும் நீர் வேகமாக ஏரியில் இருந்து வெளியேறுவதால் அங்கு 20 அடி உயரத்துக்கும் மேல் நுரை தேங்கி மலை போல காட்சியளித்தது. இந்த நுரை ஓயிட் ஃபீல்ட், பெல்லந்தூர் சாலைகளில் பரவியதால் நேற்று போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

நேற்று காலை முதல் பலத்த காற்று வீசியதால் ஏரியில் இருந்த நுரை காற்றில் பறந்து அருகிலுள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் மீது விழுந்தது. இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். துர்நாற்றம் வீசும் இந்த நுரை அருகிலுள்ள வீடுகளின் தண்ணீர் தொட்டிகளில் கலப்பதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, “இங்குள்ள ஏரிகளில் ரசாயனக் கழிவு மற்றும் டிடர்ஜென்ட் கழிவு நீர் அதிகளவில் கலப்பதால் ஏரி நீர் கெட்டுப்போகிறது. இந்த நிலையில் அதிகளவில் மழை நீர் கலந்ததால் ஏரி பொங்கி, நுரையை மலையளவுக்கு வெளியேற்றுகிறது. இந்த நுரையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் குழந்தைகளும் பெரியவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி கர்நாடக அரசு, இந்த நுரையை உடனடியாக அகற்றி சுற்றுச்சூழலை காக்க வேண்டும்” என்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகளும் கர்நாடக மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளும் பெல்லந்தூர் ஏரியை பார்வையிட்டனர். ஏரியில் தேங்கியுள்ள நுரையின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக கொண்டு சென்றனர். ஏரிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், ரசாயனக் கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x