

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.இதைத் தொடர்ந்து மீனவர்கள் தமிழக சிறைக்கு மாற்றப்படலாம் என இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ன.
இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறும்போது,
‘‘இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 இந்திய மீனவர்களையும் மீட்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது. இதுதொடர்பாக ராஜ்ஜியரீதியாகவும் சட்டரீதியா கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களால் முடிந்த அளவுக்கு அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இப்போதைய நிலையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் பிரதமர் மோடி பேசினாரா என்று நிருபர்கள் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
சுப்பிரமணியன் சுவாமி பேட்டி
தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது குறித்து அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியதாக நம்பத்தகுந்த ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விடுவிக்க வேண்டும்
இலங்கை அரசின் ஜனநாயக மற்றும் சட்ட நடைமுறைகள் மீது இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அதேநேரம், இந்த விவகாரம் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, கைதிகளை பரிமாறிக்கொள்வதற்காக இரு நாடுகளுக்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி 5 மீனவர்களை தமிழகத்தில் உள்ள சிறைக்கு மாற்ற ராஜபக்ச சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு மேல் நீதிமன்றத்தில் அப்பீல் செய்து கீழ் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவர் மோடியிடம் கூறியுள்ளார். இவ்வாறு சுவாமி தெரிவித்தார்.