

முத்தலாக் வழக்கத்தை முஸ்லிம்கள் மாற்றிக்கொள்ளத் தவறினால் அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
ஆந்திர மாநிலம், அமராவதியில் இது தொடர்பாக வெங்கய்ய நாயுடு நேற்று பேசும்போது, “முத்தலாக் வழக்கத்தை முஸ்லிம்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இதை தடுக்க அரசு சட்டம் இயற் றும். இது எவருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிடுவது ஆகாது. பெண்களுக்கு நீதி வழங்குவதே நோக்கமாகும்.
இந்து சமுதாயத்தில் குழந்தைத் திருமணம், சதி, வரதட்சிணை போன்ற தீய பழக்கங்களை தடுக்க சட்டம் இயற்றப்பட்டபோது அதை இந்து சமூகம் ஏற்றுக்கொண்டது. இந்தப் பழக்கங்கள் சமூக நலனுக்கு எதிரானது என உணர்ந்தபோது, இந்து சமூகம் அது தொடர்பாக விவாதித்து சீர்திருத்திக் கொண்டது. மனிதர்களை மனிதர்களாக பாருங்கள். அவர்களை இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என பிரிக்க வேண்டாம். முத்தலாக் போன்ற பாகுபாடு மூலம் பெண்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது” என்றார்.