Last Updated : 06 Aug, 2017 09:42 AM

 

Published : 06 Aug 2017 09:42 AM
Last Updated : 06 Aug 2017 09:42 AM

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெங்கய்ய நாயுடு அமோக வெற்றி: 3-ல் 2 பங்கு வாக்குகள் பெற்றார்

பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் வாழ்த்து: 11-ம் தேதி பதவியேற்பார்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட எம்.வெங்கய்ய நாயுடு (68) 3-ல் 2 பங்கு வாக்குகள் (516) பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவரை எதிர்த்து போட்டியிட்ட கோபால்கிருஷ்ண காந்திக்கு 244 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

கடந்த 2007-ம் ஆண்டு நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹமீது அன்சாரி நாட்டின் 12-வது குடியரசு துணைத் தலைவரானார். மீண்டும் 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, அவர் 2-வது முறையாக துணைத் தலைவரானார். இவரது பதவிக் காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 13-வது குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடுவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும் மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபால்கிருஷ்ண காந்தியும் போட்டி யிட்டனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை (545) மற்றும் மாநிலங்களவை (245) எம்.பி.க்கள் (நியமன எம்.பி.க்கள் உட்பட) என மொத்தம் 790 பேர் மட்டுமே வாக்களிக்க முடியும். இதில் மக்களவையில் 2 இடமும் மாநிலங்களவையில் 2 இடமும் காலியாக உள்ளன. நீதிமன்ற தீர்ப்பின்படி பாஜக எம்.பி. சேதி பஸ்வானுக்கு வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 785 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் நேற்று காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக சிறப்பு பேனா வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக வேட்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வெங்கய்ய நாயுடு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (மக்களவை உறுப்பினர்) உள்ளிட்டோர் முதலில் வாக்களித்தனர். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

இதுபோல, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, திபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது.

11-ல் பதவியேற்கிறார்

இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. தேர்தலில் மொத்தம் 771 வாக்குகள் (98%) பதிவானது. இதில் 516 வாக்குகள் பெற்று ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றார். இவர் வரும் 11-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 வாக்குகள் செல்லாதவை

எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட கோபால்கிருஷ்ண காந்திக்கு 244 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் வாக்களிக்க வில்லை.

தேர்தல் வெற்றி குறித்து வெங்கய்ய நாயுடு கூறும்போது, “இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. விவசாய குடும்ப பின்னணியில் இருந்த வந்த நான், இந்தப் பதவிக்கு வருவேன் என ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. எனக்கு ஆதரவளித்த பிரதமர் மோடி மற்றும் அனைத்துக் கட்சியினருக்கும் நன்றி. குடியரசுத் தலைவரின் கரத்தை வலுப்படுத்தவும் மாநிலங்களவையின் கண்ணியத்தைக் காக்கவும் பாடுபடுவேன்” என்றார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடுவுக்கு வாழ்த்துகள். அவர் மிகுந்த அக்கறையுடனும் அர்ப் பணிப்பு உணர்வுடனும் நாட்டுக்கு பணி யாற்றுவார் என்று நம்புகிறேன். கட்சியிலும் ஆட்சியிலும் அவருடன் பணியாற்றிய காலத்தை என்றென்றும் என்னால் மறக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.

இதுபோல, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வெங்கய்ய நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கோபால்கிருஷ்ண காந்தி கூறும் போது, “எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி. அவர்கள் பேச்சு சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மைக்காக வாக்களித் துள்ளனர்” என்றார்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்

ஆந்திர பிரதேச மாநிலம், நெல்லூர் மாவட்டம் சவத்தபாலம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வெங்கய்ய நாயுடு. அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், சட்டப் படிப்பையும் முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே, ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார்.

பின்னர் தனது இளம் வயதில் (1970-களில்) பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். தனது பேச்சுத் திறமையால் படிப்படியாக உயர்ந்த இவர் ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக 2 முறை பதவி வகித்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியாக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2002 முதல் 2004 வரை பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றினார்.

கடந்த 2013-ல் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்தபோது அத்வானி உள்ளிட்ட சில தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி, நாயுடு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து 2014-ல் நரேந்திர மோடி பிரதமரானதும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். கடைசியாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x