பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் பதவி பறிப்பு: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் பதவி பறிப்பு: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
Updated on
1 min read

பிஹார் மாநிலத்தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான உத்தரவை சட்டசபை சபாநாயகர் உதய்நாராயண் சவுத்ரி சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கியதாக, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான கியானேந்திர சிங் கியானூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவர் பர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

நீரஜ் சிங் பப்லூ (சாத்பூர்), ரவீந்திர ராய் (மஹுவா) மற்றும் ராகுல் சர்மா (கோசி) ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற மூவர் ஆவர். இதற்கிடையே சபாநாயகரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், இதை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவரகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆளும் கட்சியின் பலம் 115 ஆகக் குறைந்துள்ளது.பிஹாரில் கடந்த ஜூன் மாதம் 2 மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அனில் சர்மா மற்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சபிர் அலி ஆகியோர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக இந்த 4 எம்எல்ஏக்களும் செயல்பட்டனர்.

எனினும், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரியஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களான பவண் வர்மா, குலாம் ரசூல் பல்யாவி ஆகியோர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in