Last Updated : 02 Nov, 2014 11:34 AM

 

Published : 02 Nov 2014 11:34 AM
Last Updated : 02 Nov 2014 11:34 AM

கல்வி முறையில் மாற்றம் தேவை: தாய் மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் - ராஜ்நாத் சிங் கருத்து

தற்போதைய கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தாய்மொழியில் பேசுவதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.லக்னோவில் உள்ள ஜெய்பூரியா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பிரிட்டிஷாரின் வருகைக்கு பிந்தைய கால கட்டத்தில்தான், அறிவுக் களஞ்சியங்கள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளிடம்தான் இருக்கின்றன என்ற பொது சிந்தனை தோன்றியது. உண்மையில் நம்மிடமிருந்துதான் அவர்கள் பலவற்றை கற்றனர்.

ஆங்கிலேயரான மெக் காலே கொண்டு வந்த கல்வித் திட்டம்தான் சிறந்தது என்றால், சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளாகியும் இந்தியாவின் எந்தவொரு பல்கலைக்கழகமும் உலகின் முதல் 275 இடங்களிலும், தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் 100 இடங்களிலும் இடம்பெறாதது ஏன்?

பிற மொழிகளை அறிந்து கொள்வது நல்லதுதான். ஆனால், தாய் மொழியில் பேசினாலே பணிகள் நடைபெறும் என்றபோது, எதற்காக ஆங்கிலத்தில் பேச வேண்டும். சொற்பொழிவுகள், பேச்சுவார்த்தைகள், பேட்டிகள் உள்ளிட்டவற்றை முடிந்த அளவுக்கு இந்தி மொழியில் மேற்கொள்வது என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். அவரின் இந்த முடிவை, பிற மொழிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கருதக் கூடாது.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவை உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடாக மாற்றும் நோக்கத்துடன் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார். ராஜ்நாத் சிங், அரசு முறைப் பயணமாக இன்று இஸ்ரேல் செல்கிறார். அங்கு இஸ்ரேலிய பிரதமரை சந்தித்து தொழில்நுட்ப உதவி குறித்து ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x