Published : 30 Aug 2017 04:02 PM
Last Updated : 30 Aug 2017 04:02 PM

மும்பையை முடக்கிய பெருமழைக்கு இடையே சிறிய ஆறுதல்: புறநகர் ரயில்கள் சில இயக்கம்; மீட்புப் பணிகள் துரிதம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மும்பையில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்கள் மீண்டும் தங்களின் சேவையைத் தொடங்கிய நிலையில், பெரும்பாலான நீண்ட தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான முதல் கனமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மும்பை, நவி மும்பை, தானே, பால்கார், ராய்கத் மற்றும் பிற பகுதிகளில் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் என பல்வேறு இடங்களில் 3 முதல் 4 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால் அனைத்து முக்கிய சாலைகளிலும் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் ரயில்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டும் தாமதமாகவும் இயங்கப்பட்டன.லட்சக்கணக்கான பயணிகள் ரயில்கள், ரயில் நிலையங்கள், பஸ்கள், பஸ் நிலையங்கள் என ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். அவர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். கனமழையால் மும்பையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

சாண்டா க்ரூஸ் வானிலை மையம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு 297.6 மி.மீ. மழைப்பொழிவை பதிவு செய்துள்ளது. இது கடந்த 43 வருடங்களில் பருவமழைக் காலத்தில் ஏற்படும் எட்டாவது பெரிய ஒற்றை நாள் மழைப்பொழிவாகும்.

இதுகுறித்துப் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ், ''பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவசர காலத்திலும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் மட்டுமே வெளியே வர வேண்டும். எனினும் அரசின் இன்றியமையாத சேவைகள் தொடர்ந்து இயங்கும்'' என்று அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடற்படை சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மும்பையின் பல்வேறு இடங்களில் சமையல் கூடங்கள் மற்றும் உணவு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x