பெட்ரோல், டீசல் விலை ரூ.1.50 அதிகரிப்பு?
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.1.50 அதிகரித்து, மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதனால் ரூ.13,000 கோடி கூடுதல் வருவாய் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை உயர்த்தியுள்ளதால், இதே அளவு சில்லறை விற்பனை விலையிலும் ஏற்றம் ஏற்படும். அதாவது, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.50 அதிகரிக்கிறது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பெட்ரோல் விலை 7 முறை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை மூன்று முறை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வரும் சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்யும் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலையில் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இத்தகையச் சூழலில், பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.1.50 அதிகரித்து மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவால் இந்த வாரக் கடைசியில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை.
வரி உயர்வு நிலவரம்:
பிராண்டட் அல்லாத சாதாரண பெட்ரோல் மீதான வரி, லிட்டருக்கு ரூ.1.20-ல் இருந்து ரூ.2.70 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிராண்டட் பெட்ரோல் மீதான வரி, லிட்டருக்கு ரூ.2.35-ல் இருந்து ரூ.3.85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண டீசல் மீதான வரி ரூ.1.46-ல் இருந்து ரூ.2.96 ஆகவும், பிராண்டட் டீசல் மீதான விலை ரூ. 3.75-ல் இருந்து ரூ. 5.25-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
