

நாட்டில் பயிர்க்காலக்கட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பினால் விளைச்சல் குறைகிறது, இதனால் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
Proceedings of the National Academy of Sciences என்ற இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
பருவநிலை மாற்றங்களினால் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 59,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 20 டிகிரி செல்சியஸுக்கு மேற்பட்டு ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிப்பிற்கும் பயிர்க் காலக்கட்டத்தில் சராசரியாக 70 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதற்காக 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவுகளை ஆய்வு பயன்படுத்தியுள்ளது. இதற்காக 1967 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான விளைச்சல் மற்றும் பருவநிலை தரவுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகள் தற்கொலை தரவுகள் தேசிய குற்றப்பதிவேடு கழகத்திலிருந்து பெறப்பட்டுள்ளன.
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தம்மா ஏ.கார்லிடன் இந்தத் தரவுகளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கும், விவசாயிகள் தற்கொலைக்கும் தொடர்பிருப்பதாக கண்டுள்ளார்.
பயிர் செய்யும் காலக்கட்டங்களில் 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் ஒவ்வொரு 1 டிகிரி வெப்பநிலை அதிகரிப்புக்கும் 70 தற்கொலைகள் நடந்துள்ளதாகவும், பயிர் செய்யாத காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை உயர்வின் போது தற்கொலைகள் அதிகம் இருப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
1956 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான 13 மாநிலங்களின் பயிர் விளைச்சல் தரவுகள் அக்காலக்கட்டத்திய பருவநிலை மாற்றத்தரவுகளுடன் ஒப்புநோக்கப்பட்டுள்ளன.
1 செமீ மழை அதிகரித்தால் பயிர் காலக்கட்டத்தில் தற்கொலைகள் சராசரியாக 7% குறைந்துள்ளது. அதே போல் ஒரு சீசனில் நல்ல மழை பெய்தால் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு தற்கொலை எண்ணிக்கைகள் குறைந்துள்ளது.
அதிக வெயில் அடிக்கும் தென்னிந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகம் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தற்கொலை என்ற எதிர்வினை கடுமையாக உள்ளது என்று கூறும் இந்த ஆய்வு இம்மாநிலங்களில் வெப்பநிலையினால் விளைச்சல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது இந்த ஆய்வு.
ஆனால் இந்த ஆய்வு மாதிரியில் நிச்சயம் குறைபாடுகள் உள்ளன. இவர்கள் ஆய்வுப்பொருளுக்கும் வந்தடையும் முடிவுக்குமான பொருத்தமான ஆய்வுமுறை இல்லை. மேலும் தற்கொலைகளுக்கு பிற காரணங்களின் பங்களிப்பு பற்றி இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தியாவின் சராசரி வெப்பநிலை 2050-ம் ஆண்டுவாக்கில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அரசு விரைந்து செயல்படவில்லையெனில் தற்கொலைகள், இழப்புகளைச் சமாளிக்க முடியாது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.