பல தார திருமணம் குறித்து விசாரிக்க மறுப்பது ஏன்?- உச்ச நீதிமன்றம் விளக்கம்

பல தார திருமணம் குறித்து விசாரிக்க மறுப்பது ஏன்?- உச்ச நீதிமன்றம் விளக்கம்
Updated on
1 min read

பல தார திருமணம் குறித்து விசாரிக்க மறுப்பதற்கு நேரமின்மையே காரணம் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கோரிக்கை மீது விளக்கமளித்துள்ளது.

முத்தலாக் என்பது குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும். அதேநேரம் முஸ்லிம்களின் பல தார திருமணம் குறித்து விசாரணை நடத்தாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆனால், பல தார திருமணம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியது.

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, "பல தார திருமணம், நிக்கா ஹலாலா முறைகள் குறித்தும் இந்த வழக்குகளை முன்னதாக விசாரித்துவந்த இரு நீதிபதிகள் அமர்வு அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்திருந்ததால் அவற்றையும் முத்தலாக் முறை வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், "பல தார மணம் மற்றும் நிக்கா ஹலாலா போன்ற விஷயங்கள் குறித்து இப்போதைக்கு விசாரிக்க மறுப்பதற்கு நேரமின்மையே காரணம். எதிர்காலத்தில் இது குறித்து விசாரிக்கப்படும்" என உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தெரிவித்துள்ளது.

வாய்மொழியாக மூன்று முறை தலாக் என்று தெரிவித்தால் மணமுறிவு ஏற்படும் நடைமுறை இஸ்லாமியர்கள் மத்தியில் பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து ஷாயரா பானு, ஆப்ரின் ரஹ்மான் உள்ளிட்ட சில பெண்களும், குரான் சுன்னத் அமைப்பும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. இதுதவிர, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பொதுநல வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, இம்மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித், எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in