Last Updated : 17 Aug, 2017 12:04 PM

 

Published : 17 Aug 2017 12:04 PM
Last Updated : 17 Aug 2017 12:04 PM

நீட் அவசரச் சட்டம்: குடியரசு தலைவர் சார்பில் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

தமிழகத்தின் 'நீட்' அவசரச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்வியின் தேசிய நுழைவுத் தேர்வான 'நீட்' காரணமாக மாநிலப் பாடப்பிரிவுகளில் பயின்ற தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சமாளிக்கும் பொருட்டு நீட் தேர்வில் இருந்து மேலும் ஒரு வருடம் விலக்களிக்க வேண்டி அவசரச் சட்டம் தயாராகி வருகிறது. மத்திய அரசின் முன் அனுமதியுடன் இயற்றப்படும் அவசரச் சட்டத்திற்கு, மத்திய அமைச்சகங்களான சுகாதாரம், மனிதவள மேம்பாடு மற்றும் சட்டத்துறைகள் ஒப்புதல் அளித்துவிட்டன.

இதை, அமலாக்க முகவரான மத்திய உள்துறை அமைச்சகம் முழுமைப்படுத்தி இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கும். இதற்கு, குடியரசு தலைவர் நேரடியாக ஒப்புதல் அளிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. எனவே இதை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரடியாகப் பெற்று இன்று சென்னை திரும்ப உள்ளார். அதன் பிறகு எந்நேரமும் அவசரசட்டம் இயற்ற வாய்ப்புள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ''ஜல்லிகட்டுக்குச் செய்ததை போல் குடியரசுத் தலைவர் சார்பில் எங்கள் அமைச்சகம் அளித்துவிடும். இதற்கான சில சிறப்பு அதிகாரங்கள் எங்கள் அமைச்சகத்திற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு விரைவாக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு ஓர் அவசரச் சட்டத்தை தமிழகத்திற்கு இயற்றுவது இது இரண்டாவது முறை'' எனத் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டு மீதான போராட்டத்தின் போது அவசரச்சட்டம் பிறப்பித்தது. அப்போது விடுமுறை நாட்களிலும் செயல்பட்டு ஜல்லிக்கட்டு மீதான அவசரசட்ட முன்வடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதேபோன்ற நிலை நீட்-டிலும் ஏற்பட்ட நிலையில், கடந்த 14 (ஜென்மாஷ்டமி) 15 (சுதந்திரதினம்) விடுமுறை நாட்களிலும் அமைச்சகங்கள் செயல்பட்டுள்ளன.

இது குறித்து கடந்த மாதம் 28-ல் 'தி இந்து'வில் செய்தி வெளியாகி இருந்தது. மேலும், அட்டர்னி ஜெனரலிடம் மத்திய சட்டத்துறை அனுப்பி கருத்து கேட்பது வழக்கம். ஆனால், அவசரம் கருதி இதை மத்திய உள்துறை அமைச்சகமே அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் நேரடியாக அனுப்பி கருத்து பெற்றுள்ளது.

முன்னதாக தமிழக அரசு அளித்திருந்த அவசரசட்ட முன்வடிவு மீது இறுதி முடிவு எடுக்க 12-ம் தேதி மாலை அமைச்சர்கள் குழு டெல்லியில் கூடியது. மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான இந்த கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மனிதவள மேம்பாட்டுத் துறையின் பிரகாஷ் ஜவடேகர், சட்டத்துறையின் ரவிசங்கர் பிரசாத் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட மூத்த அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இதனால், சென்னைக்கு மறுநாள் 13-ம் தேதி வந்த நிர்மலா சீதாராமன் ஒரு வருடம் மட்டும் விலக்களிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தபின் தமிழக சட்டப்பேரவையை ஆறு மாதங்களுக்குள் கூட்டி அதை அமல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x