Last Updated : 21 Aug, 2017 10:02 AM

Published : 21 Aug 2017 10:02 AM
Last Updated : 21 Aug 2017 10:02 AM

சிறிய மணல் கொசுக்களால் பரவும் கொடிய கருங் காய்ச்சல்

உலகம் முழுவதும் 76 நாடுகளில் கொடிய கருங்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சூடான், பிரேசில் நாடுகளில் 90 சதவீத பாதிப்பு உள்ளது. இவற்றில் தெற்காசிய நாடுகளான இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடானில் 67 சதவீத பாதிப்பு காணப்படுகிறது. இந்த காய்ச்சலால் ஆண்டுக்கு சராசரியாக 2 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை மேற்குவங்கம், பிஹார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் (கிழக்கு) ஆகிய 4 மாநிலங்களில் கருங்காய்ச்சல் (காலா அசார்) பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டில் இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகியவை இணைந்து 2010-ம் ஆண்டுக்குள் கருங்காய்ச்சலை ஒழிக்க உறுதி பூண்டன. ஆனால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. இதைத் தொடர்ந்து 2015-க்குள் கருங்காய்ச்சலை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதுவும் வெற்றி பெறவில்லை.

எனவே நடப்பு 2017 செப்டம்பருக்குள் கருங்காய்ச்சலை ஒழிப்போம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த இலக்கையும் எட்டுவது கடினம் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

3,000 பேருக்கு பாதிப்பு

வடஇந்தியாவை கருங்காய்ச்சல் இன்னமும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தின் மால்டா பகுதியைச் சேர்ந்த ரோஹிம் சர்க்கார் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். 17 வயதாகும் அவர் எடை குறைந்து தற்போது 11 வயதுக்குரிய எடையில் இருக்கிறார். அவரது மார்பு கூடு விலா எலும்புகள் அப்பட்டமாக வெளியில் தெரிகின்றன. இதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபாத் மண்டல் (42) என்ற தொழிலாளி கடந்த 3 மாதங்களாக படுக்கையில் இருந்து முறையான சிகிச்சைக்குப் பிறகு படிப்படியாக உடல்நலம் தேறி வருகிறார்.

தற்போதைய களஆய்வுகளின்படி மேற்குவங்கம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் பேர் கருங்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிஹார், ஜார்க்கண்ட், கிழக்கு உத்தரபிரதேசத்திலும் கருங்காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டும் காணப்படுகிறது.

தொடர் காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு, பலவீனம், தோலில் புண் - தடிப்புகள், ரத்தசோகை ஆகியவை நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள் ஆகும். இந்த காய்ச்சல் ஏற்பட்டால் கல்லீரல், கணையம், எலும்பு மஜ்ஜை கடுமையாகப் பாதிக்கப்படும். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் 2 ஆண்டுகளுக்குள் நோயாளி உயிரிழக்கக்கூடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

எவ்வாறு பரவுகிறது?

மலேரியாவை போன்றே கருங்காய்ச்சலும் ஒருவகை கொசுக்கள் மூலம் பரவுகின்றன. மணல் கொசுக்கள் என்றழைக்கப்படும் இவ்வகை கொசுக்கள், சாதாரண கொசுக்களைவிட உருவத்தில் சிறியதாக உள்ளன. இவை ‘லெஷ்மேனியா டெனோவானி’ என்ற ஒட்டுண்ணியை மனிதர்களுக்குப் பரப்புகிறது.

இரண்டு வாரங்களுக்கு மேல் ஒருவருக்கு காய்ச்சல் நீடித்தால் அவருக்கு கருங்காய்ச்சலுக்கான சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆர்.கே.39, எலீசா ஆகிய ரத்த பரிசோதனைகள் மூலம் கருங்காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா என்பது கண்டுபிடிக்கப்படும்.

ஒருவருக்கு கருங்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் ‘சோடியம் ஸ்டிபோகுளுகோனேட்’ (எஸ்எஸ்பி) என்ற ஊசி மருந்து 20 நாட்களுக்கு தொடர்ந்து செலுத்தப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கருங்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க டிடிடி கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.

ஒவ்வொர் ஆண்டும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கேரளாவில் பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன. இதில் கடந்த சில ஆண்டுகளாக சிலருக்கு கருங்காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காய்ச்சல் நாடு முழுவதும் பரவும் முன்பு வடஇந்தியாவிலேயே அதனை அழிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x